
பொதுவாக வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு (பாஸ்டிங்), சாப்பிட்ட பின்னர் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவை (போஸ்ட் பிராண்டியல்) விட குறைவாக இருக்கும். வெறும் வயிற்றில் உள்ள ரத்த சர்க்கரை அளவு கல்லீரல் செயல்பாட்டையும், சாப்பிட்ட பின்னர் உள்ள ரத்த சர்க்கரை அளவு கணையத்தின் செயல்பாட்டையும் குறிக்கும்.
சிலருக்கு இதற்கு நேர்மாறாக இருக்கும். அதாவது, சாப்பிடும் முன்னர் உள்ள ரத்த சர்க்கரை அளவு, சாப்பிட்ட பின்னர் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை விட அதிகமாக இருக்கும். இது சிலருக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தி விடும். இது வேறு ஏதேனும் நோய்க்கான அறிகுறியாக இருக்குமா? சர்க்கரை நோய்க்கான மருந்தை உட்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழும்.
ஆனால், இந்த நிகழ்வு சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல இந்த நோய் இல்லாதவர்களுக்கும் காணப்படலாம். இதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
1) எதிர்வினை ரத்த சர்க்கரை தாழ்நிலை (ரியாக்டிவ் ஹைப்போ கிளைசீமியா),
2) சோமோகி விளைவு,
3) டான் அல்லது விடியல் நிகழ்வு,
4) மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை, ரத்தத்தில் கார்டிசால் ஹார்மோன் அளவை அதிகரித்து காலையில் வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
5) இரவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது சில நேரங்களில் மறுநாள் காலையில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க கூடும்.
இந்த பிரச்சினைக்கு ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தை கடைப்பிடித்தால் போதும். அதிக நார்சத்து உள்ள உணவுகள், முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அதேசமயம், சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிபடுத்த ஜி.டி.டி. (குளுக்கோஸ் சகிப்புத்தன்மை பரிசோதனை) மற்றும் எச்.பி.ஏ1சி (மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரி) ஆகியவையே சிறந்ததாகும்.
