
சென்னை,
மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை மற்றும் வாடிப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து நாளை (புதன்கிழமை) பகல் 12.10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:16847) மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ரெயில்நிலையம் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை ரெயில் நிலையம் வழியாக விருதுநகர் சென்று செங்கோட்டையை அடையும்.
இதுபோல் திருவனந்தபுரம் கோட்டத்தில் முருக்கம்புழா மற்றும் கடகாவுர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்:16127) வழியில் தகுந்த இடங்களில் நின்று 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.