மாநில அரசுகள் மூலம் கிடைக்கும் வரியினங்கள் மூலமே ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், மாநிலங்களுக்கு பிரித்து தர வேண்டிய நிதியை முறையாக வழங்காததால் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு கடந்த 18ம் தேதி சென்னையில், மத்திய நிதி ஆணையக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான நிதி பங்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டுமென தெரிவித்தார். 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய வரி வருவாய் பங்கு 41 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
ஆனால், எப்போதுமே சொல்வதை செய்யாத ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு 33.16 சதவீதத்தை மட்டுமே பகிர்ந்து அளித்துள்ளது. மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களை பொறுத்தவரை, முழுவதும் மாநில அரசின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என இரு வகை உண்டு. இதில், இரு அரசுகள் இணைந்து நிறைவேற்றப்படும் திட்டங்களில், சிலவற்றிற்கு மாநில அரசு கூடுதல் நிதியும், ஒன்றிய அரசு குறைந்த நிதியும் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துவக்கத்தில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் மட்டுமே நடந்து வந்தன.
தொடர்ந்து பலமுறை வலியுறுத்திய பிறகும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்த பிறகே திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்திய அளவில் நிதி பங்கீடை ஒன்றிய அரசுக்கு அதிகம் ஈட்டித் தரும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால், தமிழகத்திற்கான ஒன்றிய அரசின் நிதி பங்கீடு தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. எனவேதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்திற்கான ஒன்றிய அரசின் பங்கீடை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென மத்திய நிதிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும், இதன்மூலம் இந்தியா பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதற்கு உதவும் மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதையும் விளக்கிக் கூறினார்.
ஏற்கனவே, இந்திய அளவில் மீன்பிடித்தொழில் மூலம் அந்நிய செலாவணியை அதிகம் அள்ளித்தரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதாவது, இத்தொழில் மூலம் தமிழகம் தரப்பில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக ஒன்றிய அரசிடம் ரூ.37,907 கோடி வெள்ள நிவாரணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். நீதிமன்றம் வரை சென்று போராடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் ரூ.276 கோடி மட்டுமே. கேட்ட நிவாரணத் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொகையை ஒதுக்கி தமிழகத்திற்கு வஞ்சகம் செய்தது ஒன்றிய அரசு.
சென்னையில் நேற்று நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்திலும் இக்கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதாவது, பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பது, நிதி ஒதுக்கீடு, இயற்கை பேரிடர் நிதி வழங்குவதில் பாராமுகம் காட்டும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழக முதல்வர் என்ற முறையிலும், ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவராகவும், மாநிலங்களுக்கான உரிமையை அழுத்தமாக நிலை நாட்டுவதில் மு.க.ஸ்டாலின் என்றும் முதல்வராகவே திகழ்கிறார்.
The post உணருமா ஒன்றிய அரசு? appeared first on Dinakaran.