உடுமலை : நூறு நாள்வேலை வழங்க கோரி உடுமலையில் ஜமாபந்தி முகாமை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி புஷ்பாதேவி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நேற்று குறிச்சிக்கோட்டை உள் வட்டத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி,லிங்கம்மாவூர், வெங்கிட்டா புரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலபட்டி, தளி 1, 2, போகிக்கவுண்டன் தாசர் பட்டி, குரல் குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டியகவுண்ட னூர் 1, 2, மானுப்பட்டி, எலையமுத்தூர், கல்லாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கான ஜமாபந்தி நடை பெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.அப்போது, உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 மாதமாக பணி வழங்கப்பட வில்லை.
என்பது குறித்தும், வேலை வழங்க கோரியும் மனுக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பிலும் நிர்வாகிகள் தலைமையில் தொழிலாளிகள் தனித்தனியாக உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்கப்பட்டன.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,வி.தொ.சா.உடுமலை தலைவர் ரங்கராஜ் தலைமையிலும், ஜல்லிப்பட்டி ,திணைக்குளம் சந்தன கருப்பனூர், ஓணாக்கல்லூர் குறிச்சிக் கோட்டை உள்பட ஏராளமான தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
அதில், நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் வேலை செய்து வந்தோம். தற்போது விவசாயம் சார்ந்த வேலை எதுவும் இல்லை. இந்த ஆண்டுக்கான 100 நாள் வேலையும் கிடைக்கவில்லை.
இதனால் அடிப்படை தேவையான உணவு மற்றும் இதர செலவினங்களுக்கு வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். எனவே, எங்களுக்கு 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இன்று (23-ம்தேதி) பெரியவாளவாடி உள்வட்டத்தில் வலையபாளையம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், தின்னப்பட்டி, சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், ஜிலேபிநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், சின்ன பாப்பனூத்து, பெரிய பாப்பனூத்து, உடுக்கம்பாளையம், புங்கமுத்தூர், செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், ராவணாபுரம், பெரியவாளவாடி, சின்ன வாளவாடி, தீபாலபட்டி, மொடக்குபட்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமா பந்தி நடக்கிறது.
பாறைக்குழியால் சுகாதாரக்கேடு
செல்லப்பம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்களும் திரண்டு வந்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், “செல்லப்பம்பாளையம் கிராமம் மேற்கு வீதியில் பாறைக்குழி உள்ளது. இதில் ஊரில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது.
எனவே, கழிவுநீரை அகற்ற வேண்டும். இதுபற்றி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
The post உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் நூறு நாள் வேலை வழங்க கோரி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை appeared first on Dinakaran.