நன்றி குங்குமம் டாக்டர்
அகமெனும் அட்சயப் பாத்திரம்
உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
சென்ற இதழில் உணவுமுறைக் கோளாறுகளும் விளைவுகளும் என்னென்ன என்று பார்த்தோம். பருமனோ, ஒல்லியோ உடல் தோற்றத்தை வைத்து ஒருவரை உடல்கேலி (Body Shaming) செய்வதனால் ஏற்படும் மனபாதிப்புகளையும் பேசினோம்.புகழ் பெற்ற மனநல ஆலோசகர் Dany bryant உடல் கேலி மனநலத்தில் தீவிர விளைவுகளை கொடுக்கக்கூடியது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் ஸ்டீபன் ஃப்ரிட்ரே (Stephen Fredre) ‘‘உறவுக்களம் மனிதனுக்கு வாழ்க்கையைக் கொடுப்பதாக நேர்மறையானதாக இருக்க வேண்டும் சிதைப்பதாக இருக்கக்கூடாது” என்று வலியுறுத்துகிறார்.
மேலும் உடல் சார்ந்து உங்களை யாரேனும் அதிகமாகக் கேலி செய்தால் ‘‘எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள் அவர்களை நிறுத்தச் சொல்லி உரக்க குரல் கொடுங்கள்” என்றும் ஆலோசனை கூறுகிறார்.முக்கியமாக உருவக்கேலி செய்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது எல்லோரும் அவரவர் உடல் குறைகளை அறிந்தே வைத்திருக்கிறார்கள். எனவே அக்கறை என்ற பெயரில் உருவக்கேலியை தொடராமல் இருப்பது நல்லது.
தனக்கு சிறுவயதில் சரியான உணவு கிடைக்கவில்லையே என்ற நினைப்பில் வசதி வந்த பிறகு நன்றாக சாப்பிட்டால்தான் நன்றாக இருப்பாய் என்று அதிக உணவு கொடுத்து குழந்தையை கெடுக்கும் பெற்றோர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். வீட்டு பெரியவர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ அவர்களின் குழந்தைகளின் உடல் பருமனைக் குறிப்பிட்டு உண்மையான அக்கறையோடு கவனிக்கச் சொன்னால் அதுவும் உருவக்கேலி என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுவதும் பல இடங்களில் காண்கிறோம்.
‘‘இந்த வாழ்க்கை நன்றாக சாப்பிடத்தானே, உங்களுக்கு பொறாமையா” இன்று அதிக உணவு எடுத்துக்கொள்வதை ஆதரிப்பார்கள். இது முற்றிலும் தவறு.இப்படியான குடும்ப காரணிகளால் குழந்தைகளில் பலர் உடல் பருமனாகிறார்கள். சமூகம் தன் குழந்தை எப்படி பார்க்குமோ என்பது குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு மிக அவசியம். யாரையோ திருப்தி படுத்துவதற்காக கட்டுப்படுத்தும் பெற்றோர்களாக இருக்கக் கூடாது. அதேநேரம் அதிக சுதந்திரம் கொடுத்து ‘Glorifying’ பெற்றோராக இருப்பதும் மிகத்தவறு. உணவு முறைகளில் மட்டுமல்ல எதிலுமே ஒன்று அதிகம் இல்லை குறைவு என்று விளிம்பு எல்லைகளுக்குச் செல்லாமல் சமநிலையைத் தக்க வைத்துக் கொள்வதே நலவாழ்வுக்கு உதவும் என்று உளவியல் வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
பெண்களில் கொழுப்பின் அளவு 20 முதல் 27 சதவீதமாகவும் ஆண்களில் 15 முதல் 22 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அளவு மாறுபடும்போது Obesity என்று சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் முந்நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், தைராய்டு பிரச்னைகள் போன்ற உடல் பாதிப்புகளோடு மனநலத்தையும் வெகுவாக பாதிக்கும் உடல் பருமன் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது.
1989 – இல் வந்த தேவர்மகன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மெக்டொனல்ஸ், பர்கர் கிங் என்று தொடர் துரித உணவகங்களின் வணிகத்தைப் பற்றி குறிப்பிடுவார் . அப்போது தந்தை கதாபாத்திரம் சிவாஜி கணேசன் அவர்கள் அதற்கு பதிலாக, ‘‘ நம்ம ஊரில் எவன் அங்கெல்லாம் போய் சாப்பிடுறான் உங்க அண்ணன் மாதிரி ஏதாவது வேலை வெட்டி இல்லாத குடிகாரன் வேணா போய் சாப்பிடுவான்” என்று சொல்வார். ஆம் இன்று அப்படித்தான் பலரும் வேலை வெட்டி இல்லாமல் பொழுது போக்குவதற்காக சென்று உடல் நலனையும் மனநலனையும் துரித உணவகங்களுக்கு சென்று கெடுத்துக் கொள்கிறார்கள், இல்லையா.
இது எவ்வளவு சிறப்பான தீர்க்கதரிசனம்.உடல் பருமனைக் குறைக்க முன்னெடுக்கும் முயற்சிகளில் முதலில் நம்மவர்களிடயே நிற்பது ஜிம். திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உயர்வர்க்க பிரமுகர்கள் ‘நான் ஜிம் செல்கிறேன்.. அதன் மூலம்தான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் என்று சொல்வது வழக்கம். ஆனால் தற்காலத்தில் பெருமையாக சொல்லிக்கொள்வதற்காகவே பலரும் ஜிம்மில் பணம் கட்டி ஒரு வாரம் ஒரு மாதம் பெயருக்கு சென்று விட்டு பணத்தை வீணடிக்கிறார்கள்.ஜிம்களில் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கெனவும் தனித்தனியே சிறப்பாக கவனம் செலுத்த பயிற்சிக் கருவிகள் பலவுண்டு. வசதி படைத்தவர்கள் வீட்டிலேயே Thrradmill, Excercise bike போன்றவற்றை வாங்கி வைத்துக்கொண்டு நின்ற இடத்திலேயே ஓடத் தொடங்குவது பலருக்கும் விருப்பமானதாக இருக்கின்றது.
இவை தவிர Dumbbell, Jump rope, Power pack, Smith, long press என பல்வேறு பெயர்களில் வெவ்வேறு பலன் தரக்கூடிய கருவிகள் வந்துவிட்டன. இவை உடல் தசைகளை வலுவாக்க, கூடுதல் சதையைக் குறைக்க உதவும் என்பதில் நிச்சயம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கருவிசார் பயிற்சிகளுக்கு அதிகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. நடுத்தர, ஏழை மக்களுக்கு இது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்பது நிதர்சனம். சமீபத்தில் மக்களிடையே வரையறுக்கப்பட்ட அளவுக்கு மீறி, அதிக நேரம் ஜிம்மில் பயிற்சிகளை மேற்கொள்வது உடல் ஆரோக்யத்தை பாதிக்கக்கூடும் என்ற அறிவியல் உண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே உடற்பயிற்சிக் கருவிகளைத் தேர்ந்தெடுக்கும்முன் இந்தக் காரணிகளை யோசித்துவிட்டு முடிவெடுக்க வேண்டும்.
ஒட்டுமொத்த உடல் எடையை உடனடியாகக் குறைத்து உடலை புதிய வடிவில் மாற்றிக் கொள்ளும் Body reshaping, Tightening, Fat Reduction, Tumny tucking போன்ற உயர்தர அறுவை சிகிச்சைகளும் பரவலாகி விட்டன. , ‘கத்தியின்றி இரத்தமின்றி’ யும் செய்யப்படுவதாக இவ்வாறான உடனடி எடை / கொழுப்பு குறைப்பு சிகிச்சை முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. சாதாரண மனிதர்கள் பலரும் இவற்றால் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். இத்தகு சிகிச்சைகள் பின்னாளில் உயிருக்கே ஆபத்து தருவதாகி விட்ட செய்திகளையும் படித்திருக்கிறோம். இயற்கைக்கு முற்றிலும் முரணான எச்செயலை நாம் மேற்கொண்டாலும் இயற்கை திருப்பி நமக்கு அளிக்கக் கூடிய பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
ஆனால், அழகாக தோன்ற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் அவசரமாக உடல் எடை சிகிச்சைகளைத் தெளிவின்றி மேற்கொள்ள வேண்டுமா என்று ஒருமுறைக்கு பலமுறை சிந்திக்க வேண்டும். நவீன காலத்தில் சிலர் சர்ஜரி செய்து கொள்கிறார்கள். கொழுப்புகளை உறிஞ்சி எடுப்பது எப்படி, பாடி டைட்னிங் ஷேப்பிங் etc. இதை சரியான இடத்தில் முறையான மருத்துவர்களால் செய்யப்படுகிறதா என்பதை ஆலோசிப்பது மிக அவசியம்.
உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு எனப்படும் Dieting – ஐ பலரும் மேற்கொள்கின்றனர். ஆனால் தொடர்ந்து சில உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வது, சிலவற்றைத் தவிர்ப்பது எனும் உணவுமுறையானது மாவுச்சத்து , நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து போன்ற அடிப்படை சத்துக்களின் சமநிலையை பாதிக்கக்கூடும். வைட்டமின்களான உயிர்ச்சத்து அளவும் மாறுபடும்.நுண் சத்துக்களின் இழப்புகளை சரியாக அறிந்து ஒவ்வொன்றையும் ஈடு செய்வது நடைமுறையில் சாத்தியமாகாது. எனவே சரிவிகித உணவுக் கட்டுப்பாடு முறையை மேற்கொள்விதில் மிகுந்த கவனம் தேவை.
சிலர் FDA வகுத்துள்ள மருந்துகளை எடுத்துக்கொண்டு அதிகப் பசியை கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள். இது ஆரம்பத்தில் ஓரளவு பயன் தருவதுபோல் தோன்றினாலும் உடல் இயக்கச் செயல்பாடுகளின் அடிப்படை சுழற்சிகள் மாறுபட்டு எதிர்விளைவுகளைக் கொண்டு வரக்கூடும்.இயற்கையாக அமைந்த நம் உடல் உறுப்புகளுக்கு முறையாக வகுத்த சில சிறுசிறு அசைவுகள் மூலம் பயிற்சி அளிக்கும் ‘ஏரோபிக்ஸ்’ முறை மிகுந்த பயன் தரும். சீரான அசைவுகளின் தொகுப்பாக இந்த உடல் பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்ளும்போது தசைகள் வலுப்பெறுகின்றன. இதயத் துடிப்பு சீராவதோடு உடலுக்கான ஆக்சிஜன் அளிப்பும் கூடுதலாகிறது.
நடைப்பயிற்சி, மெல்லோட்டம், மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்றவையும் ஏரோபிக் பயிற்சி வகைமையின் கீழ் இடம் பெறுகின்றன. குறிப்பிட்ட தாள லயத்தோடு, சீராக தொடர்ந்து இவற்றை மேற்கொள்ளும்போது உடல் தகுதியில் (body fitness) இல் நல்ல முன்னேற்றத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம். செலவுகள் இல்லாத எளிய இத்தகு பயிற்சிகளை மேற்கொள்வது உடல் எடையைப் பராமரிக்க உதவுவதோடு, மனச்சோர்வை நீக்கி, புத்துணர்வையும் வழங்கும் என்பது கூடுதல் சிறப்பு.
யோகாசனங்கள் உடலையும் மனதையும் ஒரு சேர கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துவதோடு நீடித்த பயனையும் தரும். ஆனால் குறிப்பிட்ட சில யோகாசனங்கள் சிலருக்கு பொருந்தாத கடினமான தன்மையைக் கொண்டிருக்கும் முறையான யோகாசனப் பயிற்சியாளரின் ஆலோசனை இன்றி தாமாக மேற்கொள்ளும் சிலவகை ஆசனங்கள் உடல் வலி, சதைப் பிடிப்பு, மூச்சுத் திணறல் என்று எதிர்விளைவுகளைக் கொடுக்க வாய்ப்புகளுண்டு. எனவே எது நம் உடல் தன்மைக்குப் பொருந்தும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Stress ஏற்படும் போது சிலர் குறைந்த அளவு உண்கிறார்கள் சிலர் அதிக அளவு உண்கிறார்கள். இதனால் மேலும் மனத் தடுமாற்றங்களும் மனச்சோர்வும் ஏற்படும். இது போன்ற Binge eating, Burgeing போன்ற உணவுமுறைக் கோளாறுகளுக்கு காக்னேட்டிவ் தெரபி முறைகளும், முறையான ஆலோசனைகளும் தீர்வைத் தரும்.அவற்றை தயக்கமின்றி நாட வேண்டும்.
கார்போஹைட்ரேடுகளை குறைத்துக் கொள்வது நார்ச்சத்துக்களை விட்டமின்களை அதிக அளவு எடுத்துக் கொள்வது என்று செய்யலாம். பழ உணவு நீர் உணவு பெலியோ டயட் என்று பல்வேறு வகையான டயட்கள் வந்துள்ளன. சாதக பாதகங்களை ஆராய்ந்து நமக்கு பொருத்தமான உணவு கட்டுப்பாட்டினை மேற்கொள்வது உடல் பருமனை குறைக்க உதவும்.
சிலர் என்று விரதம் இருப்பார்கள் நம் முன்னோர்கள் முந்தைய காலத்திலேயே வழக்கப்படுத்திய ஒன்றுதான் உடல் தூய்மையாக இருக்கும் பழைய கழிவுகள் வெளியேறுவதற்கும் புதிய ரத்தம் பாய்வதற்கும் இது உதவும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இது நல்ல மாற்றங்களை தரக்கூடியதாகும்.இவற்றையெல்லாம் தவிர்த்து சுய கட்டுப்பாட்டுடன் குடும்பத்தினரின் உதவியை நாடி முறையான அளவான உணவு உண்பது மிகுந்த நலனைத் தரும்.
வீட்டு வேலைகள் நடைபயிற்சி அடுத்த தெருவுக்கு செல்ல வேண்டுமானாலும் வண்டி எடுத்துக்கொண்டு செல்வது என்று இல்லாமல் நடந்து செல்வது நேரத்திற்கு உணவு உண்பது எட்டு மணி நேரம் உறங்குவது மனநலத்தை பாதுகாப்பாக குடும்ப உறவுகளை பேணி வைத்துக் கொள்வது என்று இருந்தாலே உடல்நலம் சீராக இருக்கும் குறைவான பொருளாதார வசதி குறைவான கல்வி குறைவான தகவல்கள் இருந்த காலகட்டத்தில் மனிதன் மிகச்சிறந்த உடல் தகுதியோடு சீரான உடல் உழைப்போடு இருந்தான்.
ஆனால் இன்று உடல் தகுதி குறைபாடு அதிகரித்து விட்டது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது எனில் எதில் நாம் வளர்ச்சி அடைகிறோம். எளிய வாழ்வியல் முறைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்வது நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். பழங்கள் காய்கறிகள்.. குழந்தைகளுக்கு இது பிடிக்காது அது பிடிக்காது என்று வளர்ப்பதும் தவறானது என்று உணர வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரி,லிச்சி,பெர்ரி என்று வெளிநாட்டு பெயர் மோகத்தில் அவற்றை உண்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். கொய்யா, எலுமிச்சை, நெல்லி போன்ற நம் நாட்டுப் பழங்களையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அவரவர் வாழிடத்தில் விளைந்த தானியங்கள் காய்கறிகள்.கோவைப்பகுதியில் கீரை கடைவார்கள் பசு மாட்டுக்கு துவரை, பச்சைப்பயிறு கொள்ளு, சோளம் கடைந்து சாப்பிடுவார்கள்.
உருளை கத்தரிக்காய் சேர்த்து ஒரு பொரியல் செய்வார்கள்.அதேபோல் ஊட்டி சுற்றுவட்டாரங்களில் கிழங்கு, பீன்ஸ் வகைகள் அதிகம்.கிடைக்கும். பழங்குடி மக்கள் ஒரு குழம்பு செய்வார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.கேரள உணவு வகைகளில் தேங்காய் அதிகம் சேர்ப்பதை அறிவோம். பாரம்பரிய சுவை மட்டுமல்லாது இந்த உணவுப் பழக்கங்கள் நம் முன்னோர்களால் நம் நாட்டின் காலநிலை, உடல் தன்மைகளை அறிந்து பொருத்தமாக அமைக்கப் பெற்றவை என்ற சிறப்பை உணர்ந்து கொள்ளும் நேரமிது.
குளிர் மிகுந்த மேலை நாடுகளில் வட மாநிலங்களில் கோதுமை ரொட்டி போன்ற ஜீரணிக்க தாமதமாகும் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் வெப்பகாலநிலை உள்ள நாம் அவர்களின் உணவுப் பழக்கத்தை எடுத்துக்கொள்கிறோம். உடல் நீரிழப்பு dehydration அதிக வாய்ப்புகள் இருக்கும் வெப்ப மண்டலப் பகுதியில் வறண்டு போன காய்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது என்னென்ன உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற விழிப்புணர்வு மிக அவசியம். மலசிக்கல், வயிற்றுவலி, அதன் விளைவாக தலைவலி, மயக்கம், நீரிழப்பு, தோல் பாதிப்பு ஏற்படலாம்.
எப்போதாவது மாற்று உணவுகளை ருசி பார்ப்பது தவறு இல்லை. அடியோடு நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும், சிறப்பான வாழ்க்கை முறைகளையும் முற்றிலும் மறந்து விட்டொழிக்க வேண்டாமே. எது சாப்பிட்டால் என்ன ஆகும் என்ற அடிப்படையான உணவுசார்ந்த அறிவை மேம்படுத்திக் கொண்டு ஆரோக்யமான பாதையில் நடை போடுவோம்.
The post உடல் பருமனுக்கான நடைமுறைத் தீர்வுகள்! appeared first on Dinakaran.