
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜுஜுவாடி அருகே தனியார் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34) ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருடைய மகள் சசிகலா (வயது 33). இருவருக்கும் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாஸ்கர் ஒசூர் பகுதிகளில் நான்கு இடங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் உடற்பயிற்சி மையம் (ஜிம்) நடத்தி வருகிறார். இவருடைய மனைவியும் ஜிம் மாஸ்டராக பயிற்சி நிலையத்தில் பயிற்சி நடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடற்பயிற்சி மையத்திற்கு வந்த வேறு ஒரு பெண்ணுடன் பாஸ்கருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வபோது வெளியூர் சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பாஸ்கர் மனைவிக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக பாஸ்கருக்கும், மனைவி சசிகலாவுக்கும் அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் அவ்வப்போது தம்பதியை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு குடும்பத்தகராறில் சசிகலா இறந்து விட்டதாக அவருடைய கணவர் சிப்காட் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்ததன் அடிப்படையில், பாஸ்கரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் தானும் மனைவியும் இரவில் அதிக நேரம் உல்லாசமாக இருந்ததால் திடீரென மூச்சு திணறி இறந்து விட்டதாக ஜிம் மாஸ்டர் கதறி அழுதார். பின்னர் போலீசாரின் தொடர் விசாரணையில்,
கடைசியில் திடீர் டுவிஸ்ட் இருந்தது. மனைவியை துணியால் கழுத்து இறுக்கி கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதை அடுத்து சசிகலா உடல் உடற்கூறு ஆய்விற்கு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனைவியை கொலை செய்துவிட்டு நாடக மாடிய ஜிம் மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.