உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து சென்னை வரை 6 சிறுவர்கள் நேற்று தொடர் ஓட்டத்தை தொடங்கினர். 13 நாட்கள் சென்னை வரை 700 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் இந்த தொடர் ஓட்டத்தில் உலக அமைதி, பெண் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு, இயற்கை வளம் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சகோதரர்கள் பிரதிஷ், பிரணிஷ், கணீஸ், சிவ சாஸ்தா, பெளதின் சிவா, கார்த்திக் ஆகிய பள்ளி மாணவர்கள் சோழன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு அமைப்பு சார்பில் தொடர் ஓட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர் ஓட்டத்தை சாமிதோப்பு வைகுண்டர் தலைமைபதியின் தலைமை குரு பாலபிரஜாதிபதி அடிகளார், சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் மவுரிய புத்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏராளமானோர் உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.