உடற்பயிற்சி இயக்குனர், உபகரணங்கள் இல்லாததால் விராலிமலை அரசு பள்ளி மாணவிகள் விளையாட்டு பயிற்சி பெறுவதில் சிரமம்: கோரிக்கை நிறைவேற்ற எதிர்பார்ப்பு

4 months ago 7

விராலிமலை: விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாததோடு உடற்பயிற்சி இயக்குநரும் இல்லாததால் மாணவிகள் விளையாட்டுப் பயிற்சி பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி ஊராட்சியில் இயங்கி வரும் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1065 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 33 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளது. ஆனால் இப்பள்ளியில் உடற்பயிற்சி இயக்குனரும், போதிய அளவு விளையாட்டு உபகரணங்களும் இல்லாதது மாணவிகளின் உடற்திறனை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளி தொடங்கிய நாள் முதல் அனைத்து மாணவிகளின் விளையாட்டுத் திறனை கண்டறியும் வகையில் உடற்கல்வி இயக்குநர் மூலம் பயிற்சி அளித்து அவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வட்டம், குறு வட்டம், மாவட்டம், மாநிலம் என்று விளையாட்டு போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.

இதில் மாணவ, மாணவிகள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கும், பயிற்சி அளித்த ஆசிரியருக்கும் பெருமை சேர்ப்பார்கள். ஆனால், தற்போது அரசுப் பள்ளிகளில் விளையாட்டுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல் விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதிய விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் பள்ளி இயங்கி வருகிறது. முழு நேரமும் கல்வியில் மட்டுமே மாணவிகள் கவனம் செலுத்தும் நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மைதானத்தில் விளையாட்டில் ஈடுபடும் போது மாணவிகளின் மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கல்வியில் பெரிய அளவில் சாதிக்க முடியாதவர்கள் கூட விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாட்டுக்காக அரசு வழங்கும் ஒதுக்கீடு (கோட்டா) மூலம் இன்று அரசு பணிகளில் நல்ல நிலையில் உள்ளதற்கு பல்வேறு எடுத்துகாட்டு இன்றளவும் உள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக பள்ளிகளில் விளையாட்டு கல்விக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது: நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களை விட கிராமப்புற மாணவர்களுக்கு உடல் திறன் அதிகம் உள்ளது. அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்த வீரர்களை நாம் உருவாக்க முடியும். இதற்குத் தேவையான மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க அரசு சார்பில் பள்ளிகளுக்கு சிறப்பு தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், அந்த தொகை குறைவாக வழங்குவதால் ஆய்வகங்களுக்கு தேவையான அறிவியல் உபகரணங்கள் மற்றும் பள்ளித் தேவைக்கான பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளுக்கு உபகரணங்கள் இல்லாததால் பல பள்ளிகளில் கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுகள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, அனைத்து விளையாட்டுகளுக்கும் உபகரணங்களை அரசுப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். விளையாட்டு கல்விக்கு என்று அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

The post உடற்பயிற்சி இயக்குனர், உபகரணங்கள் இல்லாததால் விராலிமலை அரசு பள்ளி மாணவிகள் விளையாட்டு பயிற்சி பெறுவதில் சிரமம்: கோரிக்கை நிறைவேற்ற எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article