
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, கள்ளிமந்தையம் அருகே உள்ள ஒண்டிபொம்மன்நாயக்கனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற உச்சி மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் ராமேஸ்வரம் சென்று கடலில் புனித நீராடி ராமநாதசாமியை தரிசனம் செய்து அங்கிருந்து கலசங்களில் புனித நீர் எடுத்து வந்து உச்சி மகாகாளியம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனை அடுத்து நேற்று (புதன்கிழமை) அதிகாலை கோவில் கிணற்றுக்கு சென்று உச்சி மகாகாளியம்மன் கரகம் அலங்கரித்து பூப்பல்லக்கில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு கோவிலில் மூலவருக்கு முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அக்னி சட்னி எடுத்தும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பக்தர்களுக்கு கிடா கறியுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
இனறு (வியாழக்கிழமை) மாலை அம்மன் கரகம் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கிணற்றிற்கு கொண்டு சென்று கரைக்கப்படுகிறது.
இத்திருவிழாவில் ஒட்டன்சத்திரம், பெரியகோட்டை, கள்ளிமந்தையம், பழனி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.