அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு கொடுத்த சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி

3 hours ago 2

சென்னை,

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (22.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுதொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்போர்ஸ்மென்ட் டைரக்டெட் (Enforcement Directorate) என்று சொல்லப்படுகிற அமலாக்கத்துறை என்பது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக அல்லாத ஆட்சி நடைபெறுகின்ற மாநிலத்திலே யார் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் வழக்கு போட வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

தமிழ்நாட்டிலே மு.க. ஸ்டாலினுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி 2021லிருந்து தொடர்ந்து மக்கள் மத்தியிலே செல்வாக்கோடும் இருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கின்றது. அதனால்தான் 2021க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று வருகின்றது.

இதனைக் கண்டு தாங்கி கொள்ள முடியாமல் எப்படியாவது இந்த அரசுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இன்னும் தேர்தலுக்கு ஏழு மாதமே இருக்கிற வேளையில் அமலாக்கத் துறையின் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. தமிழகத்திலே தொடர்ந்து பல காலமாக டாஸ்மாக் பற்றி பல வழக்குகள் நிலுவையிலே இருந்துவருவதை மறைத்துவிட்டு, திமுகவின் மீது பழிசுமத்துகிற வகையில் அமலாக்கத்துறை மூலம் பத்திரிகையிலே செய்தி வெளியிடுவதும், பாஜகவினுடைய தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதும் தொடர்ந்து வாடிக்கையாக இருந்துவருக்கிறது.

அதற்கெல்லாம் ஒரு சம்மட்டி அடி கொடுப்பதைப் போல இன்றைக்கு சுப்ரீம்கோர்ட்டு அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதித்துள்ளது. இது தமிழக மக்களுடைய உணர்வுகளை மதிப்பதோடு மட்டுமல்ல, அமலாக்கத்துறையின் அக்கபோர்களுக்கு முடிவும் கட்டி இருக்கிறது. ஆகவே, இந்தத் தீர்ப்பை திராவிட முன்னேற்ற கழகம் வரவேற்கின்றது.

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நீதிமன்றமே தடை கொடுத்த பிறகு, அதுவும் சுப்ரீம்கோர்டே தடை கொடுத்துவிட்ட பிறகு, வேற ஒன்றும் தேவையில்லை. கடுமையான கண்டனம்கூட தெரிவித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆகவே இதன் பிறகாவது, மத்திய அரசு அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும்.

அமலாக்கத் துறை எப்படிப்பட்ட நிறுவனம் என்றால், கேரளாவில் இரண்டு கோடி ரூபாய் அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் பெற்றபோது பிடிபட்டார். அதனால், அந்த மாநிலத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் விசாரிக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே ஒரு டாக்டரிடத்தில் திண்டுக்கல்லிலே லஞ்சம் கேட்டு, அமலாக்கத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடிப்பட்டனர். ஆகவே, அமலாக்கத்துறை என்பது பிளாக்மெய்லிங் ஆர்கனைசேஷன் மாதிரி இந்தியா முழுவதும் செயல்படுவதைத்தான் சுப்ரீம்கோர்ட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article