உச்சகட்ட போர் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

4 hours ago 3

புதுடெல்லி,

காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா அதிரடியாக அறிவித்தது.

இதன்படி சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவு, வணிகத்தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை மீறுவோம் என்றும், இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் நுழைய தடை என்றும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது.

அதே நேரம் இந்திய எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடுகளை நடத்த தொடங்கினர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன. கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இரு நாடுகளிடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதமர் நேரு, அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தற்போதைய சூழலில் பாகிஸ்தானின் விவசாயம், குடிநீர் ஆதாரம் முழுமையாக சிந்து நதி கட்டமைப்பையே சார்ந்திருக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் 90 சதவீத விவசாயம் சிந்து நதி கட்டமைப்பின் 6 நதிகளை சார்ந்து இருக்கிறது. இந்த நதிகளின் தண்ணீரில் 47 சதவீதம் பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இந்தியா 39 சதவீதமும், சீனா 8 சதவீதமும், ஆப்கானிஸ்தான் 6 சதவீதமும் தண்ணீரை பயன்படுத்துகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே 3 போர்கள் நடைபெற்றபோதுகூட பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைத்திருக்கிறது.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக காஷ்மீரின் ஜீலம் நதியில் கட்டப்பட்டுள்ள கிசன்கங்கா அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே சிந்து நதி கட்டமைப்பில் 6 இடங்களில் புதிய அணைகளை கட்ட ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் காரணமாக இந்த இடங்களில் அணைகள் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்பட்டிருப்பதால் காஷ்மீரின் சாவல்கோட், கிர்தாய், பகல் துல் உட்பட 6 இடங்களில் புதிதாக அணைகள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடங்களில் நீர்மின் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 6 நீர்மின் நிலையங்கள் மூலம் 10,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு பாகிஸ்தானுக்கு ஆபத்தான எதிர்வினையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் சிந்து நதி அமைப்பு ஆணையம் (IRSA) ஆலோசனைக் குழு, காரீப் பருவத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் 21 சதவீத தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கணித்துள்ளது, இதன்படி செனாப் நதி நீர் வரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தானுக்கு கடும்பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. 

Read Entire Article