உச்ச நீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து 2 பாஜ எம்பிக்களை நீக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

8 hours ago 2

புதுடெல்லி: ‘உச்சநீதிமன்றத்தை விமர்சித்த 2 பாஜ எம்பிக்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்தது குறித்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் அனுமதி அளித்ததுடன் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலும் கூட மசோதாக்கள் மீது 3 மாதத்தில் முடிவெடுக்க அறிவுறுத்தியது.

இது பற்றி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்தது சர்ச்சையான நிலையில் பாஜ எம்பியான நிஷிகாந்த் துபே நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘உச்சநீதிமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டுமானால் நாடாளுமன்றம், சட்டபேரவைகளை மூடி விடலாம்’ என்றார். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் விமர்சித்தார். இதே போல மற்றொரு பாஜ எம்பியான தினேஷ் சர்மா,‘ இந்திய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி உயர் அதிகாரம் பெற்றவர். அவரை யாரும் சவால் செய்ய முடியாது. மாநிலங்களவை, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் உச்சநீதிமன்றம் அதற்கு உத்தரவிட முடியாது’ என்றார்.

இந்த பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜ தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்ட பதிவில், ‘‘நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா தெரிவித்த கருத்துகள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள். அவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கும் பாஜவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்றார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று எக்ஸ் தளத்தில், ‘‘நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் வெறுப்பு பேச்சுகள் மற்றும் அமைப்புகள், சமுதாயங்கள், நிறுவனங்களுக்கு எதிராக அடிக்கடி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

2 எம்பிக்கள் தெரிவித்த கருத்துகளில் இருந்து பாஜ தலைவர் நட்டா விலகியிருப்பது என்பது முட்டாள் தனமானது. மக்களை முட்டாளாக்குவது போலாகும். இரண்டு எம்பிக்களின் கருத்துகள் குறித்து பிரதமர் பேசாமல் இருப்பது அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாகும். இரண்டு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாதது ஏன். குறைந்தபட்சம் 2 பேரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்பி மனோஜ் பாண்டே, ‘‘இது துரதிர்ஷ்டவசமானது. நாட்டில் சர்வாதிகாரம் அதிகரித்து வரும் நிலையில், நாடாளுமன்ற எம்பி ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு சவால் விடுகிறார். இந்த நபர்கள் நீதிபதிகளை விட அதிகம் படித்தவர்களா? பெரும்பான்மை பலம் என்ற இருட்டை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இதை நீதிமன்றங்கள் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா?’’ என தெரிவித்துள்ளார்.

மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கையில், பாஜ தலைவர்கள் குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான தலைவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை களங்கப்படுத்தும் விதமாக செயல்படுகின்றனர். தமிழ்நாடு மற்றும் வக்பு சட்ட திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளினால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். இந்தியாவை வட கொரியா,ஈராக் போல் மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ்-பாஜ விரும்புகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மீடியா பிரிவு தலைவர் பவன் கேரா, ‘‘நிஷிகாந்தின் பேச்சு அரசியல் சட்டத்தின் மீது நேரடியாக விழுந்த தாக்குதல். இது முதல் முறையாக நடந்தது இல்லை. துணை ஜனாதிபதியின் கருத்துகளை கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். பிரதமர் மோடியின் அமைதியான தலையசைவு இல்லாமல் இந்த கருத்துகள் வந்திருக்காது. அவருடைய அறிவுறுத்தல்கள் இல்லாமல் இது வந்திருக்காது.

அவ்வாறு இல்லையென்றால் அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டும். இரண்டு எம்பிக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா. அப்படி அனுப்பி இருந்தால் அதை பகிரங்கமாக வெளியிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல, நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அட்டர்னி ஜெனரல் வெங்டகட்ரமணிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனாஸ் படேல் கடிதம் எழுதியுள்ளார். நீதித்துறையிலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* நிஷிகாந்த் துபே மீண்டும் சர்ச்சை
உச்ச நீதிமன்றம் தொடர்பாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியை முஸ்லிம் ஆணையர் என்று நிஷிகாந்த் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வக்பு சட்ட திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, ‘‘வக்பு சட்ட திருத்தம் முஸ்லிம் நிலங்களை அபகரிக்கும் அரசாங்கத்தின் தீய சதி திட்டம் ஆகும்.

உச்சநீதிமன்றம் இதை கண்டிக்கும் என நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். இது பற்றி நிஷிகாந்த் நேற்று கூறுகையில், ‘‘எஸ்.ஒய். குரேஷி தேர்தல் ஆணையர் அல்ல, அவர் ஒரு முஸ்லிம் ஆணையர்’’ என கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post உச்ச நீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து 2 பாஜ எம்பிக்களை நீக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி appeared first on Dinakaran.

Read Entire Article