மயக்க ஊசி செலுத்தி நர்ஸ் தற்கொலை: புதுமாப்பிள்ளை கைது

1 day ago 5

திருமலை: காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் வேதனை அடைந்த நர்ஸ் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாளகுடா அடுத்த பொக்கனுந்தலபாடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஸ்வரி (25). இவர் ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். ஐதராபாத் மதுராபுரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜனா (28) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு ஜனாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே சில வாரங்களுக்கு முன் ஜனாவுக்கு வேறு ஒரு பெண்ணை அவசர அவசரமாக அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதையறிந்த மல்லேஸ்வரி மனவேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று தனது பெற்றோர் மற்றும் தோழிகளுக்கு வாட்ஸ்அப்பில், நான் அதிகளவில் மயக்க மாத்திரை உட்கொண்டும், மயக்க ஊசியும் செலுத்திக்கொண்டேன். சிறிது நேரத்தில் நான் இறந்துவிடுவேன். எனது சாவுக்கு காரணம் ஜனா உள்பட 9 பேர்தான் என தெரிவித்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மற்றும் தோழிகள் உடனடியாக மல்லேஸ்வரி தங்கியிருந்த விடுதிக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் மல்லேஸ்வரி சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ஜனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மயக்க ஊசி செலுத்தி நர்ஸ் தற்கொலை: புதுமாப்பிள்ளை கைது appeared first on Dinakaran.

Read Entire Article