சென்னை: தமிழக சட்டபேரவையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உங்கள் தொகுதியின் முதலமைச்சர் திட்டம் கட்சி பாகுபாடின்றி நடைபெறுகிறது. உறுப்பினர்கள் வழங்கிய பணிகளில் சாத்தியக்கூறு இல்லாத பணிகளுக்கு மாற்றாக வேறு பணிகளை வழங்கினால் அதனை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி – மக்கள் சார்ந்த பிரச்னைகளை தான் உறுப்பினர்கள் கோரிக்கையாக வழங்குகிறார்கள். நிதி அதிகமாக இருப்பதாக கூறி நிராகரிக்கப்படுகிறது. என்னுடைய தொகுதியில் 10 திட்டங்களை வழங்கினேன். அவற்றில் இரண்டு தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலு: சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் போல எனது தொகுதியில் கூட அரசு நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடம் அமைக்க மனு வழங்கினேன். ஆனால் இடமில்லாத காரணத்தினால் மாற்று பணிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
சபாநாயகர் அப்பாவு: என்னுடைய தொகுதியில் கூட 440 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் குறித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளேன். பத்து கோரிக்கைகளில் 2,3,4 கோரிக்கைகள் நிறைவேறுவது நல்ல முன்னேற்றம் தான். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கேட்பது 300, 400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் வகுப்பறைகள் தான். இரண்டு கோடி, மூன்று கோடி மதிப்பிலான திட்டங்களை கூட நிராகரித்து விடுகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டப்பணிகளை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நானே ஆய்வு செய்கிறேன்.
அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் எந்த கோரிக்கையுமே வழங்காத நிலையில், மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அவரிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி: நிதி அதிகம் எனக்கூறி நிராகரிக்கப்படுகிறது. சாத்தியமில்லை எனக்கூறி வேறு ஒரு பணியை பரிந்துரைக்க சொல்கிறீர்கள். வேறு ஒரு பணியை வழங்கினால் அதனையும் நிராகரிக்கிறீர்கள். சபாநாயகர் அப்பாவு: நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வந்த திட்டம், நல்லதே நடக்கும். இவ்வாறு சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
The post உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் appeared first on Dinakaran.