உங்கள் உயிரிப்பகுதியை அறிந்து கொள்ளுங்கள் திட்டம்; நன்னீர் நாய், வெளிநாட்டு பறவை உள்ளிட்ட அபூர்வ இனங்கள் கண்டுபிடிப்பு: புதுச்சேரியில் வளமான பல்லுயிர் பெருக்கம்

2 months ago 7


புதுச்சேரி: உங்கள் உயிரிப்பகுதியை அறிந்து கொள்ளுங்கள் திட்டத்தில் புதுச்சேரியில் நீர்நாய், வெளிநாட்டு பறவை உள்ளிட்ட அபூர்வ இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரவிந்தோ சொசைட்டியின் மற்றொரு பிரிவான ‘ஸ்வர்ணிம் புதுச்சேரி’ சார்பில் உங்கள் உயிரிப்பகுதியை அறிந்து கொள்ளுங்கள் என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. இது மாணவர்கள் மற்றும் மக்கள் பார்வையில் படும், ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் பலவற்றை உள்ளடக்கிய உயிரினங்களை தொகுத்து வழங்க இருக்கிறது. புதுச்சேரி, விழுப்புரம், ஆரோவில், கடலூர் உயிரிப்பகுதியில் உள்ள விலங்குகளின் படங்களை எடுத்து அவற்றை நேட்சரலிஸ்ட் என்ற செயலியில் பதிவேற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். படம் எடுத்து பதிவேற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த இனம் அடையாளம் காணப்பட்ட இடத்தின் புவிசார் ஒருங்கிணைப்புகளையும் குறிக்க வேண்டும்.

இதுகுறித்து ஸ்வர்ணிம் புதுச்சேரி அமைப்பை சேர்ந்த டிபி ரகுநாத் கூறுகையில், ‘புதுச்சேரி ஒரு சிறிய யூனியன் பிரதேசமாக இருந்தாலும், அது ஒரு வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டிருக்கிறது. தேங்காய்திட்டு நீர்நிலைகள், கழிமுகப்பகுதியில் உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் மேலும் நாங்கள் முள்ளோடை, பனித்திட்டு மற்றும் புதுச்சேரி- விழுப்புரம்- ஆரோவில், கடலூர் ஆகியவற்றை உள்ளடக்குவோம். அடிப்படையில், இது ஒரு குடிமக்களின் அறிவியல் முயற்சியாகவும், உயிரிப்பகுதியின் பல்லுயிர் பதிவேட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்காரணமாக இது எதிர்காலத்தில் ஒரு அறிவுத்தளமாக மாறும். புதுச்சேரி, விழுப்புரம், ஆரோவில், கடலூர் உயிரிப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான பல்லுயிர் பெருக்கம் உள்ளது, அதை அழிக்கக்கூடாது. எங்களது கண்டுபிடிப்புகள் குறித்த சிறு புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிடுவோம், இந்த முயற்சி பல்லுயிர் பெருக்கத்தின் ஆவணப்படுத்தலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

புதுச்சேரியின் சூழலியல் நிபுணர் அருண்குமார் பச்சையப்பன் கூறுகையில், நல்லவாடு பகுதியில் பல்லுயிர் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது,. இந்த கடலோர சுற்றுச்சூழல் அமைப்பில் 300க்கும் மேற்பட்ட இனங்கள் செழித்து வளர்வது தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் பல்வேறு வகையான மீன்கள், பறவைகள், ஊர்வன, பட்டாம்பூச்சிகள், அந்துபூச்சிகள், சிலந்திகள் ஆவணப்படுத்தியிருக்கிறோம். இது அப்பகுதியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கண்டுபிடிப்புகளில் சதுப்புநிலங்களை சுற்றி வரும் மென்மையான ரோமம் பூசப்பட்ட நன்னீர் நாய் குறிப்பிடத்தக்கது. இது அழிவின் விளிம்பில் இருக்க கூடியதாக பட்டியலிடப்பட்ட இனமாகும். இது கடல் உணவுச் சங்கிலியில் உச்ச வேட்டையாடுபவராக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மட்ஸ்கிப்பர்கள் (உளுவை மீன்), வணிக ரீதியாக முக்கியமான மீன்களான சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர், சேற்று நண்டுகள், இந்திய கண்ணாடி மீன்கள் மற்றும் சாம்பல் நிற முல்லட்டுகள் போன்ற இனங்களையும் இந்த கணக்கெடுப்பு பதிவு செய்தது. இவை அனைத்தும் அப்பகுதியின் நீர்வாழ் பல்லுயிர் பெருக்கத்தைக் குறிக்கிறது.

நல்லவாடு பகுதி புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாகவும் செயல்படுகிறது, பவழக்கால் பறவைகள், கடற்புறாக்கள் மற்றும் டெர்ன்கள் (ஆலா பறவை) போன்ற இனங்கள் அடிக்கடி இங்கு வந்து செல்கிறது. கூடுதலாக, இது கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடமாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இது அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், கணக்கெடுப்பின்போது இறந்து போன ஆலிவ் ரெட்லி ஆமைகளை பார்ப்பது துரதிஷ்டவசமாக இருந்தது. இதனை பாதுகாக்கும் நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழல் வளம் இருந்தபோதிலும், வெளியூர் இனங்களான நைல் ஜிலேபி மீன், மொசாம்பிக் ஜிலேபி போன்றவை ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.

மீன் வளர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இனங்கள், மிகவும் ஆக்ரோஷமானவை, பெரும்பாலும் பூர்வீக மீன் எண்ணிக்கையை விட அதிகமாக பல்கி பெருகுகின்றது. இது உணவு சங்கிலியின் இயக்கத்தை மாற்றுகின்றன மற்றும் பல்லுயிரியலைக் குறைக்கிறது. மேலும் பருவகால மாறுபாடு மற்றும் வாழ்விடம் சார்ந்த தரவுகளைப் படம்பிடித்து, உயிரினங்களின் பரவல் மற்றும் ஏராளமான உயிரினங்களை முறையாக வரைபடமாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுச்சேரி- விழுப்புரம்- ஆரோவில்- கடலூர் உயிரிப் பிராந்தியத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்த தரவுத்தளம், ‘குடிமக்கள் அறிவியல்’ இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

The post உங்கள் உயிரிப்பகுதியை அறிந்து கொள்ளுங்கள் திட்டம்; நன்னீர் நாய், வெளிநாட்டு பறவை உள்ளிட்ட அபூர்வ இனங்கள் கண்டுபிடிப்பு: புதுச்சேரியில் வளமான பல்லுயிர் பெருக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article