
போர்ட் லூயிஸ்,
மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையை அந்நாட்டு பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் புகழ்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, மொரீசியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இரு நாடுகளுக்கு இடையேயான ஆழ்ந்து வேரூன்றிய கலாசார உறவுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் மீண்டும் வலியுறுத்தி கூறினார். என்னை போன்ற அரசியல்வாதிகள், அவர்கள் கூற நினைத்த விசயங்களை கூறிவிட முடியாது. எனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை.
ஏனெனில், பிரதமரின் செய்கையால் நான் அகமகிழ்ந்து போனேன். நீங்கள் எப்போதெல்லாம் எங்களுடைய நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள் என கூறினார்.
மொரீசியஸில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.