உக்ரைன் போர்: வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

4 hours ago 1

சியோல்,

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் படைகள் நுழைந்தன. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் குர்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

பின்னர் படைகள் மேற்கொண்டு உள்நுழைவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் சுமார் 15 ஆயிரம் வீரர்களை அங்கு அனுப்பியது.

ஆனால் உக்ரைன் தாக்குதலில் சுமார் 4 ஆயிரம் வீரர்கள் இறந்தனர். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் மேலும் 3 ஆயிரம் வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.

இதனால் உக்ரைன் தாக்குதலை முறியடித்த ரஷியா குர்ஸ்க் பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்றியது. எனவே உக்ரைன் ராணுவத்தால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே குர்ஸ்க் பிராந்தியத்தைக் கைப்பற்ற உதவிய வடகொரியாவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதின் கூறுகையில், குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்ட வடகொரிய வீரர்கள் ரஷியாவை தங்களது சொந்த தேசம் போல கருதி வீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தனர். அத்தகைய வீரர்களுக்கு ரஷியா மிகவும் கடமைப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் சர்வதேச சட்டத்தை மீறி ரஷியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக வடகொரியா மீது தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது. ரஷியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் முன்னரே குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் வடகொரியா தரப்பில் இதற்கு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

Read Entire Article