கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது மூன்றாண்டு கால நிறைவை நோக்கி செல்கிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான மூன்றாண்டு கால போரில் 45 ஆயிரம் வீரர்கள் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்றிரவு கூறினார். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி, உக்ரைனுக்கு இன்று பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்நாட்டின் கீவ் நகரை சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில், உக்ரைனுக்கு 55 மில்லியன் பவுண்டுகள் (ரூ.602.96 கோடி) நிதியுதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.
இவற்றில், உலக உணவு திட்டத்தின் கீழ் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு உக்ரைன் நாட்டின் ரூ.32 கோடியே 87 லட்சம் மதிப்பிலான தானியங்களை அனுப்புவதும் அடங்கும்.
சிரியாவில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அதிபர் பஷார் ஆசாத், ரஷிய அதிபர் புதினுடன் முன்பு கூட்டணியில் இருந்தபோது, ரஷியாவிடம் இருந்து தானியங்களை வாங்கியது.
எனினும், ரஷிய ராணுவ படையெடுப்பின்போது ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் நிலத்தில் இருந்து, அதிக அளவிலான தானியங்கள் திருடப்பட்டு உள்ளன என இங்கிலாந்து கூறுகிறது.
உக்ரைன் மீது ரஷியாவால் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் ஆற்றல் நிலையங்களை பராமரிப்பதற்கான பணிக்கு உதவவும், ரூ.148.61 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த மாதம் உக்ரைனுக்கு பயணம் செய்திருந்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவு மந்திரியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.