லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி கதேஹரி(அம்பேத்கர் நகர்), காசியாபாத், மஜவான்(மிர்சாபூர்), சிசாமாவ்(கான்பூர் நகர்), கர்ஹால்(மெயின்புரி), மில்கிபூர்(அயோத்யா), மீராபூர்(முசாபர்நகர்), கெய்ர்(அலிகார்), புல்பூர்(பிரயாக்ராஜ்) மற்றும் குன்டர்கி(மொரதாபாத்) ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதிகளில் கடந்த முறை 10 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும், 3 இடங்களில் பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் நிஷாத் கட்சி ஆகிய இரு கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த முறை இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தர பிரதேசத்தில் 'இந்தியா' கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. எதிர்வரும் இடைத்தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். அனைத்து இடங்களிலும் 'இந்தியா'' கூட்டணி அபார வெற்றியை பெறும்" என்று தெரிவித்தார்.