ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

3 months ago 18

ஈரோடு: ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புதரில் கவிழ்ந்த விபத்தில், காரில் பயணித்த 2 இளம்பெண்கள் பலியாகினர். ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அவரது காரில் இரண்டு இளம்பெண்களை ஏற்றிக்கொண்டு நசியனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். கார், ஈரோடு வில்லரம்சம்பட்டி பகுதியில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் 3 முறை உருண்டு சென்று, சாலையோர புதரில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 2 இளம்பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் மூலம் காரை வெளியே எடுத்து, காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 2 இளம்பெண்களின் உடல்களை மீட்டு விசாரித்தனர். இதில், இறந்த ஒரு பெண் அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த கணபதி மனைவி சவுந்தர்யா என்பது தெரியவந்தது. மற்றொரு பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article