ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

3 weeks ago 8

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த ஹரிணி என்ற மாணவி, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் தேவபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் – சாந்தி என்ற தம்பதியினருக்கு ஹரிணி(13) என்ற மகள் உள்ளார். ஹரிணி ஈரோடு மாவட்டம் அருகே உள்ள அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

ஹரிணிக்கு கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளியில் கணித தேர்வு நடைபெற்றுள்ளது. ஹரிணியின் தாயார் சாந்தி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் நிலையில் தேர்வில் பங்கேற்பதற்காக மாணவியை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் மாணவி தேர்வெழுதிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து பள்ளியில் இருந்த வாகனம் மூலமாக அந்தியூரில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது மாணவிக்கு முதலுதவி அளித்த சிறுது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழந்ததையடுத்து மற்ற பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்தியூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்த சிறுமியின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பள்ளியில் தேர்வெழுதி கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article