ஈரோடு-சத்தி 4 வழிச்சாலையில் செயல்படும் வாரச்சந்தைக்கு மாற்று இடம் அமைத்து கொடுக்கப்படுமா?

3 months ago 10

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு : ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலையில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைக்கு மாற்று இடம் அமைத்து கொடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரையிலான இருவழிச்சாலையை அகலப்படுத்தி 4 வழிச்சாலையாக அமைக்க கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் ரூ.376 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

அதன்படி, ஈரோடு பஸ் நிலையம் அருகில் இருந்து சித்தோடு வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தி, சாலையோரம் இரும்புத்தடுப்புகள், சாலை நடுவில் தடுப்பு கான்கிரீட் பாளங்கள், சாலையை ஒருபுறமிருந்து மறுபுறம் கடந்து செல்ல இரும்பு பாலங்கள் அமைக்க ரூ.104.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல, சித்தோட்டில் இருந்து கோபி வரை சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ரூ.272 கோடி மதிப்பீடில் 4 வழிச் சாலை அமைக்கும் பணிகளும் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதில், முதல் கட்டமாக ஈரோடு முதல் சித்தோடு வரையிலான சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி, ஈரோடு பஸ் நிலையம் அருகில் சத்தி ரோட்டில் தொடங்கி சித்தோடு வரை அகலப்படுத்தப்பட்ட சாலையின் இருபுறமும் குடியிருப்புகளுக்கு செல்லும் பாதைகள் தவிர்த்து மீதமுள்ள பகுதிகள் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகளை கடந்த நிலையில் ஈரோடு, வீரப்பன் சத்திரம் அடுத்துள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நுழைவு வாசல் தொடங்கி, சூளை வரை சத்தி நோக்கி செல்லும் ரோட்டில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை தாண்டி நெஞ்சாலை ஓரத்திலேயே, சுமார் 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பழங்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோல, அந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. இதில், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த சந்தை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் பொதுமக்களும் திரளானோர் இந்த சந்தையில் கொள்முதல் செய்ய வந்து செல்கின்றனர்.

இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், எதிர்புறம், சத்தியில் இருந்து ஈரோடு வரும் வழித்தட மார்க்கத்தில் செயல்பட்டு வந்தது. 4 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது, அந்த இடம் அகலப்படுத்தப்பட்டதால் அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில், தற்போது 4 வழிச்சாலைக்குள்ளேயே செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்த சந்தைக்கு திரளான மக்களும் காய்கறிகள், பழங்கள் வாங்கிச் செல்ல வருபவர்கள் 4 வழிச்சாலையின் பாதி தூரத்துக்கு தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்வதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தவிர விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பாக அமைகிறது.எனவே, இந்த வாரச் சந்தை அதேபகுதியில், போக்குவரத்து பாதிப்பு மற்றும் எவ்வித இடையூறுகளுமின்றி செயல்பட தகுந்த இடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post ஈரோடு-சத்தி 4 வழிச்சாலையில் செயல்படும் வாரச்சந்தைக்கு மாற்று இடம் அமைத்து கொடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article