மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுர ஆதீன மடம் உள்ளது. இங்கு ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வைகாசி பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு ஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தருமபுரம் மேலவீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை வெள்ளி நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் தூக்கி சென்றனர். பின்னர் அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று குரு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாதர் பூஜை, குருஞானசம்பந்தர் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டார். மாலையில் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், துர்க்கை அம்மன் கோயில் மற்றும் மேலகுருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். இதைதொடர்ந்து பட்டின பிரவேச நிகழ்ச்சி துவங்கியது.
இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதீனம் ஆபரணங்கள் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் படைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் பட்டின பிரவேசமாக பல்லக்கை தோளில் தூக்கி சென்றனர். மேல வீதி, கிழக்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதிகளில் பூர்ணகும்ப மரியாதையுடன் பக்தர்கள் குருமகா சன்னிதானத்துக்கு வரவேற்பு அளித்தனர். பட்டின பிரவேச நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
The post மயிலாடுதுறை கோயிலில் பட்டினபிரவேசம்: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து சென்ற பக்தர்கள் appeared first on Dinakaran.