சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்துவதற்கும் அதை வெளியிடுவதற்கும் தடை விதித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு (கிழக்கு) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:- 1951-ம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, எந்த நபரும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ பரப்பக் கூடாது.