ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

2 hours ago 1

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி, இத்தொகுதிக்கு கடந்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 10ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக, பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. இதனால் கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலின்படி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் இறுதி பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்ததையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வந்தன.

இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுகளை கண்காணிக்க வெப்கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் 300 பேர், பட்டாலியன் போலீசார் 450 பேர், ஆயுதப்படை போலீசார் 250 பேர், சட்டம் ஒழுங்கு போலீசார் 1,678 பேர் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பதிவான வாக்குகள் எண்ணிக்கை, வருகிற 8ம் தேதி சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெறவுள்ளது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article