![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38723607-eroad33.webp)
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடந்தது. இதை முன்னிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனவரி 7-ந் தேதி முதல் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. தேர்தலில் ஓட்டுப்போடும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு என வருவாய்த்துறையினர், போலீசார் கொண்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள், சேமிப்பு தொகை மூலம் ஜவுளி, நகை எடுக்கச்செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை 8-ந் தேதி நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டு விட்டதாக ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டு உள்ளன.எனவே மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் உள்ளிட்ட அனைத்து குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலெக்டரின் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு மறைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதுபோல் அலுவலகங்களில் மறைக்கப்பட்ட கல்வெட்டுகள், தலைவர்களின் பெயர்களை மூடி இருந்த துணி, காகிதங்கள் அகற்றப்பட்டன. அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் மறைந்த தலைவர்களின் உருவப்படங்கள் மீண்டும் வைக்கப்பட்டன.