ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது: சீமான், சாட்டை துரைமுருகன், நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

1 week ago 1

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவுபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி உட்பட 46 பேர் போட்டியில் உள்ளனர். திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், தங்கபாலு, மதிமுக சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். நாதக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் ஈரோட்டிலேயே முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவு பெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாகவும் ஏற்கனவே நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது 11க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மரப்பாலம் அருகே முனிசிபல் சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நாதக தெருமுனை கூட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் அறிவுறுத்தியபோது அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். புகாரின்படி சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் 7 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது: சீமான், சாட்டை துரைமுருகன், நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article