![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38318255-untitled-7.webp)
சேலம்,
சேலம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் 3 ஆசிரியர்கள் இணைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது தொடர் கதையாகி வருகிறது. வேலூரில் ஓடும் ரெயிலில் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணி தள்ளிவிடப்பட்டதில் 4 மாத கரு சிதைந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையில் உயர்பதவியில் உள்ள ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து என கூறுவது மிகுந்த அச்சத்தை தருகிறது.
சிவகங்கையில் காவல் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ. தாக்கப்படுகிறார். தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாகி உள்ளது. குற்றவாளிகள் அச்சமின்றி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடந்துள்ளது என்பதே தி.மு.க.வின் மோசமான ஆட்சிக்கு சான்று.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால் தி.மு.க. வெற்றியடைந்துள்ளது. அ.தி.மு.க.வினர் ஓட்டுக்களை கள்ளத்தனமாக போட்டு தி.மு.க. போலி வெற்றி அடைந்துள்ளது. நெல்லை சென்று அல்வா சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்கிறார்.
ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பியதால் டெல்லியில் பா.ஜ.க. வென்றுள்ளது. டெல்லி தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்கிற சந்தேகம் எழும்புகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. இவ்வாறு அவர் கூறினார்.