ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 56 லட்சம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இன்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்த நிலையில் இன்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்துள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் களத்தில் உள்ளனர்.