அரூர், ஜன.19: அரூர் அருகே சித்தேரி மலையில் 6000 அடி உயரத்தில், மலைவாழ் மக்கள் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடினர். அரூர் அருகே சித்தேரி மலையில் 63 கிராமங்கள் உள்ளன. மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி விழா நடத்துவது வழக்கம். அதற்காக, சித்தேரியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகூர் செக்கம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்று 6000 அடி உயரம் கொண்ட பாறை மீது ஏறி, கரியபெருமாள் வெங்கடராம சாமி கோயிலுக்கு செல்கின்றனர். இந்த மலை, கோட்டமலை என்றழைக்கப்படுகிறது. சித்தேரி ஊராட்சியில் உள்ள 63 கிராமத்திற்கும் தலைவர், துரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். லட்சுமண குரு மற்றும் மந்திரி கவுண்டர், ஊர் கவுண்டர்கள், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு, சாமியை பல்லக்கில் வைத்து மலை மீது சுற்றி விளையாடினர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், எங்கள் முன்னோர்களால் பல தலைமுறைகளாக இந்த வழிபாட்டு முறையை கடைபிடித்து வருகிறோம். 10 நாட்கள் விரதமிருந்து, தை மாதம் மூன்றாம் நாள் சாமிக்கு பொங்கல் வைத்து பூஜை செய்து, சாமியை பல்லக்கில் தூக்கி மலை மீது சுற்றி விளையாடுவோம். பெண்கள் கும்மி பாட்டு பாடுவார்கள். இந்த விழாவிற்கு ஏற்காடு மலை, பச்சமலை, கருமந்துறை மலை, வத்தல்மலை ஆகிய மலை பகுதிகளிலிருந்து ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொள்வார்கள். இங்கு வந்து சாமியை கும்பிட்டு சென்றால், குழந்தை வரம், திருமண வரம், நோய் நொடி தீரும் என்ற ஐதீகம் உள்ளதால், மலைவாழ் மக்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது,’ என்றனர்.
The post பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடிய மலைவாழ் மக்கள் appeared first on Dinakaran.