தர்மபுரி, ஜன.19: தர்மபுரியில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய 50 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்து, வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். தர்மபுரி நகரில் முக்கிய வீதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனங்களில் செல்ல போலீசார் தடைவிதித்துள்ளனர். இருப்பினும், விதிகளை மீறி அதிக திறன்கொண்ட டூவீலர்களில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களால் விபத்து ஏற்படுகிறது. மேலும், டூவீலர்களில், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி ஓட்டுவதால், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதை தடுக்கவேண்டும் என தர்மபுரி மாவட்ட எஸ்பிக்கு, பொதுமக்கள் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சின்னசாமி, சதீஷ் மற்றும் போலீசார் நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப் அருகே, நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி, சத்தத்துடன் வந்த டூவீலர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.சோதனையில் அவ்வாறு டூவீலர் ஓட்டி வந்தவர்களிடம் முறையான டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், நம்பர் பிளேட்டு இல்லை. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த டூவீலர்களை ஓட்டி வந்தவர்கள் அனைவரும் சாதாரண கூலி வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சின்னசாமி அவர்களை தனியாக அழைத்து சென்று சாலை விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார். இனிமேல் அவ்வாறு வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
The post அதிவேகமாக டூவீலர் ஓட்டிய 50 பேருக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.