ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி 6 மாடுகள் பலி: ரயில்கள் தாமதம்-பயணிகள் அவதி

1 week ago 7

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி 6எருமை மாடுகள் பலியானது. இந்த விபத்து காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திருப்பத்தூர் அடுத்த சு. பள்ளிப்பட்டு அருகே நள்ளிரவு 6 எருமை மாடுகள் தண்டவாளத்தை கடந்துள்ளன. அப்போது அவ்வழியாகசென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி 6 எருமை மாடுகளும் பலியானது. இதைபார்த்த ரயில் என்ஜின் டிரைவர், ரயில் தடம் புரளாமல் இருக்க உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கும், மீட்பு பணி குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சுமார் 2 மணி நேரம் போராடி ரயிலில் சிக்கிய எருமை மாடுகளின் உடல்களை மீட்டனர்.

இதற்கிடையே தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய எருமை மாட்டை மீட்ட பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அரை மணி நேரம் தாமதமாக தன்பாத் மற்றும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி 6 மாடுகள் பலி: ரயில்கள் தாமதம்-பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article