ஈரோடு,
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மறைந்தார். இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். ஆனால், உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்., 5-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 1800-425-0424, 0424 2267674, 0424 2267675, 04242267679, 9600479643 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை எண்கள் 0424 2242136 5 04242242258 எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.