ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 402 வாக்காளர்களில், 1 லட்சத்து 48 ஆயிரத்து 676 பேர் வாக்குப்பதிவு செய்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 62 ஆயிரத்து 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட யுவராஜா 56 ஆயிரத்து 4 வாக்குகள் பெற்றார்.
இதைத்தொடர்ந்து திருமகன் ஈவெரா இறந்ததால் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்றார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். அதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2-வது முறையாக இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக எம்.எல்.ஏ.வை வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர். தற்போது கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்கள், 37 3-ம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.