
தெஹ்ரான்,
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 10வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி இன்று ரஷியா பயணம் மேற்கொள்கிறார். அவர் நாளை ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது ஈரான் - இஸ்ரேல் போர், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து புதினுடன் சையது அப்பாஸ் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.