
வாஷிங்டன் டி.சி.,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை வழியே ஊடுருவி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை இலக்காக கொண்டு காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது.
இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு இந்திய நேரத்தின்படி இன்று காலை டிரம்ப் உரையாற்றினார். அதில், ஈரானில் வெற்றியுடன் நடத்தி முடித்த ராணுவ தாக்குதலை பற்றி பேசியுள்ளார். அப்போது அவருடன், துணை ஜனாதிபதி வான்ஸ், அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மார்க் ரூபியோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அவர் பேசும்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னணி நாடாக ஈரான் உள்ளது. இந்த நிலை தொடர கூடாது. அதற்கு பதிலாக அமைதி நிலவ வேண்டும்.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது. இதற்காக அமெரிக்க ராணுவத்தினருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டு விட்டன என்று பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து, ஈரான் அமைதியை விரும்பவில்லை. அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து, அதனை ஊக்குவித்து வருகின்றனர். இதனால், ஈரான் மீது தாக்குதல் தொடரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஒன்று அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும்.
ஈரானில் உள்ள அணு உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அவை தகர்க்கப்பட்டு உள்ளன. ஈரானில் சில இலக்குகளை நாங்கள் தாக்காமல் விட்டு வைத்துள்ளோம். அவர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈரானில் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குதல் நடத்தி தகர்ப்போம் என சூளுரைத்துள்ளார்.