ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவா... அரபு நாடுகளின் நிலைப்பாடு என்ன?

3 months ago 21

தெஹ்ரான்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது.

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மீது இந்த மாத தொடக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும், அவற்றில் பல ராக்கெட்டுகளின் தாக்குதலை முறியடித்து விட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்தது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார். ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலன்ட் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, ஈரான் நாட்டுக்கு பதிலடி தருவதற்கான அனைத்து விசயங்களும் தயாராக உள்ளன. இந்த பதிலடிக்கு அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து, ஈரானின் அணு சக்தி அல்லது எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை நோக்கி பதில் தாக்குதலை நடத்தும் சூழலுக்கு இஸ்ரேல் அரசு தள்ளப்பட்டது.

இந்நிலையில், வளைகுடா பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய அண்டை நாடுகளான அரபு நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தலைமையிலான தாக்குதலுக்கு ஏதுவான வசதிகள் அரபு நாடுகளால் செய்து தரப்பட்டால், இஸ்ரேலில் உள்ள மக்கள் குடியிருப்பு கட்டமைப்புகள் மற்றும் அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அச்சுறுத்தி உள்ளது.

இதுபற்றி வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில், எண்ணெய் வளம் செறிந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட அமெரிக்காவுடன் கூட்டணியில் உள்ள நாடுகளுக்கு தூதரகம் வழியே ரகசிய முறையில் எச்சரிக்கை செய்தி ஒன்றை ஈரான் நாடு அனுப்பியுள்ளது.

இதில், ஈரான் நாடு மீது தீவிர தாக்குதல்களை தொடுப்பதற்கு ஏதுவாக, தங்களுடைய எல்லை பகுதிகளையோ அல்லது வான்வெளியையோ இஸ்ரேலுக்கு உதவும் வகையில் பயன்படுத்த அனுமதி வழங்கினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த நாடுகள் பைடன் அரசை தொடர்பு கொண்டு, விரிவான மோதலில் ஈடுபட முடியாத நிலையை எடுத்து கூறியது.

ஈரானுக்கு எதிராக செயல்பட்டால், தங்களுடைய எண்ணெய் இருப்புகள் இலக்காக கொண்டு தாக்கப்படலாம் என அச்சம் தெரிவித்து உள்ளது. இதில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழு அளவிலான போர் ஏற்பட்டால், ஹார்மஸ் ஜலசந்தி வழியே நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படும். உலகளாவிய எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்படுவதுடன், எண்ணெய் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரிக்க வழிவகுத்து விடும்.

இந்த பகுதி மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் கூட ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தி விடும் என்பது வளைகுடா நாடுகளின் கவலையாக உள்ளது. இதனால், ஈரானுக்கு எதிரான ராணுவ மோதலுடனான எந்தவித தொடர்பையும் தவிர்க்கவே சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.

Read Entire Article