தெஹ்ரான்,
ஈரான் நாட்டின் பிரபல பாப் இசை பாடகராக அறியப்படுபவர் அமீர் உசைன் மக்சவுத்லூ (வயது 37). உடலின் பல பாகங்களில் டாட்டூ எனப்படும் பச்சை குத்தியிருக்கிறார். டாடாலூ என்ற செல்ல பெயரால் பலரால் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், முகமது நபிக்கு அவமதிப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக முதலில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், சுப்ரீம் கோர்ட்டில் இதுபற்றிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, உசைனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக உசைன் மேல்முறையீடு செய்ய முடியும்.
2018-ம் ஆண்டு முதல் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உசைன் வசித்து வந்த சூழலில், 2023-ம் ஆண்டு டிசம்பரில் துருக்கி போலீசார் அவரை ஈரானிடம் ஒப்படைத்தனர். அப்போது முதல் ஈரானில் உசைன் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கிறார். 2015-ம் ஆண்டு ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு ஆதரவாக பாடல் ஒன்றை டாடாலூ வெளியிட்டார். எனினும், 2018-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி வகித்தபோது, இந்த திட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.