ஈசனை மட்டும் அன்பே சிவம் என்று சொல்லி வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

4 hours ago 3

?ஈசனை மட்டும் அன்பே சிவம் என்று சொல்லி வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?
– அயன்புரம் த. சத்தியநாராயணன்.

சிவம் என்ற வார்த்தைக்கு ஈசன் என்ற பொருள் மட்டும் கிடையாது. மங்களம், உயர்வு, களிப்பு, நன்மை, முக்தி, கடவுளின் அருவுருவ நிலை என்று பல்வேறு அர்த்தங்கள் அந்த வார்த்தைக்குள் உண்டு. ஈஸ்வரன் உருவமின்றி அருவுருவமாக லிங்கத் திருமேனியாக காட்சியளிப்பதால் அவரை சிவன் என்று அழைக்கிறார்கள். குணங்களிலே மிக உயர்ந்த குணம் அன்பு என்றும், இந்த அன்பினைக் கொண்ட மனிதனே கடவுளின் சாயலைக் கொண்டவன் என்றும் எல்லா மதங்களும் கூறுகின்றன. எங்கெல்லாம் அன்பு வெளிப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவனின் நிழல் படிகிறது என்கிறார் புத்தர். அவ்வளவு ஏன், சிவன், விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி என்று எந்த தெய்வத்தின் அஷ்டோத்ர நாமாவளியை எடுத்துக் கொண்டாலும் அதில் ஓம் சிவாயை நம: என்ற வார்த்தை இடம் பிடித்திருப்பதைக் காண இயலும். “சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாய விஷ்ணவே” என்ற மந்திரத்தை அடிக்கடி காதால் கேட்கிறோமே.. நாம் விஷ்ணு என்ற வார்த்தையைக் கேட்டதும் பெருமாளை மட்டும் நினைத்துக் கொள்கிறோம். விஷ்ணு என்ற பதத்திற்கு ஸர்வ வ்யாபின: அதாவது எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் அன்புதான் கடவுளின் அருவுருவ நிலை, அதுவே முக்தியைத் தரக்கூடியது என்பதே நிஜம். ஆக அன்பே சிவம் என்ற வார்த்தைக்கு அன்புதான் நமக்கு உயர்வை அளிக்கக்கூடிய சக்தி, அந்த சக்தியே கடவுள் என்று பொருள் காணவேண்டும். அத்தகைய உயர்வான இறைசக்தியைக் குறிப்பிடுகின்ற பொதுவான வார்த்தையே சிவம் என்பதே உங்கள் கேள்விக்கான விளக்கம்.

?அடிக்கிற பயங்கர வெயில் விஞ்ஞானிகள் வானில் விட்டிருக்கிற விண்கலங்களின் விளைவாய் இருக்குமா?
– கே.ராமமூர்த்தி, கீழகல்கண்டார்கோட்டை.

நிச்சயமாக கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் எந்த வகையிலும் இயற்கையான நிகழ்வுகளில் மாற்றத்தை உருவாக்க இயலாது. அடிக்கிற வெயிலும், பெய்கின்ற மழையும் கிரஹங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. அதனுடைய தாக்கத்தினைத் தாங்கிக்கொள்ளும் திறனில்தான் நாம் செயற்கையின் மூலம் மாறுபாடு கண்டிருக்கிறோம். மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு வெறும் கட்டிடங்களாகக் காட்சியளிப்பதால் வெயிலின் கடுமை வாட்டி வதைக்கிறது. ஏரிகளும், குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் சேமிக்கப் படாமல் பஞ்சம் உண்டாகிறது. அடிக்கிற வெயில் எப்போதும்போல்தான் அடிக்கிறது. நமது செய்கைகளால் நம்மால் அதன் தாக்கத்தினைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. விஞ்ஞானிகள் வானில் விட்டிருக்கின்ற விண்கலங்களினால்தான் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது என்ற கருத்து ஏற்புடையது அல்ல.
முற்றிலும் தவறானது.

?நம் இயல்பு எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும்?
– பாரதி, விருதுநகர்.

மருத்துவரிடம் போகிறோம். ஆபரேஷனுக்கு மூன்று லட்சம் செலவாகும் என்கிறார். இப்பொழுதெல்லாம் இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம். நாம் பேரம் பேசாமல் கொடுக்கிறோம். கடன் வாங்கியாவது கொடுக்கிறோம். இது அதிகம் என்று அவரிடம் வாக்குவாதம் செய்வதில்லை. மருந்துக் கடைக்காரர் 9000 ரூபாய் என்று பில் போடுகிறார். மறு பேச்சு பேசாமல் கொடுக்கிறோம். இது அதிகம் என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்வதில்லை. பையனுக்கு ஸ்கூல் பீஸ் லட்ச ரூபாய் என்கிறார்கள். ஆஹா… என்று கட்டுகின்றோம். ஆனால், வீட்டுக்கு வந்த கீரைக்காரக் கிழவி ஒரு கட்டு இருபது ரூபாய் என்று சொன்னால், ‘‘ஏன் கிழவி, இப்படி அநியாயத்துக்கு கொள்ளை அடிக்கிறாய்?” என்று கேட்கிறோம். நம் இயல்பு இப்படித்தான் இருக்கிறது.

?சனீஸ்வர பகவானுக்கு மட்டும் கறுப்பு நிற வஸ்திரம் சாத்துவதன் ஐதீகம் என்ன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சனீஸ்வர பகவான் என்று சொல்வது தவறு. ‘சனைஷ்சரன்’ என்று சொல்வதே சரி. ஈஸ்வரப் பட்டம் சனிக்கு வழங்கப்பட்டிருப்பதாக நாம் கருதுவது தவறு. இதற்கு புராண ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. ‘சனைஷ்சரன்’ என்ற சொல்லிற்கு மெதுவாக நகர்பவன் என்று பொருள். இந்த சனைஷ்சரன் என்பது மருவி சனீஸ்வரன் ஆகியிருக்கலாம். வேதமும் சரி, ஜோதிட சாஸ்திரமும் சரி, வானவியல் அறிவியலும் சரி இந்த மூன்றுமே சனியின் நிறம் கறுப்பு என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. சனியின் வாகனம் என்று நாம் நம்பும் காகத்தின் நிறம் கறுப்பு என்பதாலும், சனிக்கு உரிய தானியம் எள்ளு என்பதாலும் சனிக்கு உரிய நிறம் கறுப்பு என்று நாமாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நீலவர்ணம் என்றுதான் வேத மந்திரங்கள் சனியை உருவகப்படுத்துகின்றன. ஜோதிட சாஸ்திரமும் சனியின் நிறம் நீலம் என்றுதான் அறிவுறுத்துகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக வானவியல் அறிவியல் ரீதியாக டெலஸ்கோப் மூலமாக காணும் அறிவியலாளர்களும் சனியின் நிறம் நீலம் என்றே அறுதியிட்டுச் சொல்கிறார்கள். ஆகவே நவகிரஹங்களில் உள்ள சனிக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்துவதை விட நீலநிற வஸ்திரம் சாத்துவதே சாலச்சிறந்தது..

?‘கோயிலில் காலணி தொலைந்தால் பாவம் தொலைந்ததாகக் கொள்’ என்று கூறும் வாதம் ஏற்புடையதா?
– ந.கனிமொழி கயல்விழி, கண்ணமங்கலம்.

ஏற்புடையது அல்ல. இது முற்றிலும் மூடநம்பிக்கையே. காலணி தொலைந்தால் பாவம் தொலைந்து விடும் என்பது உண்மையென்றால் பாவம் செய்பவர்கள் எல்லோரும் வேண்டுமென்றே காலணியை தொலைத்துக் கொண்டிருப்பார்கள். இம்மாதிரியான கூற்றுக்கள் காலணியைத் தொலைத்தவனின் மன ஆறுதலுக்காக சொல்லப்படுவதே தவிர, இந்தக் கூற்றில் உண்மை கடுகளவும் இல்லை.

?வெறும் ஏட்டுப் படிப்பு கடவுளை அடைய உதவுமா?
– கண்ணப்பன், செங்கல்பட்டு.

ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. கடவுளைப் பற்றிய படிப்பு கடவுளைக் கொண்டு வந்து சேர்க்காது. இனிப்பு என்று எழுதிய காகிதத்தை எத்தனை தான் நாக்கில் வைத்தாலும் இனிக்காது. அதனால் தான் சுய அனுபவமாக நம்முடைய ஆன்றோர்கள் தங்களுடைய தெய்வ அனுபவத்தை எழுதி வைத்தார்கள். அதற்கு உதாரணமாகத்தான், ‘‘நான் கண்டு கொண்டேன்’’ ‘‘என் நாவுக்கே’’ என்று சுய அனுபவமாக சொல்லி வைத்தார்கள். காரணம், முயற்சி செய்யாமலேயே, சில பேர் எனக்கு அந்த அனுபவம் இல்லையே என்று சொல்வார்கள். அது மட்டும் இல்லை. தெய்வீக அனுபவம்கூட அவரவர்களுக்கு வேறுபடுவது உண்டு.

The post ஈசனை மட்டும் அன்பே சிவம் என்று சொல்லி வழிபடுவதன் தாத்பர்யம் என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article