இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கண்டனம்

3 months ago 23

லண்டன்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதனால், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் கொல்லப்பட்டனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுத்து உள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு முற்றிலும் கண்டனம் தெரிவிக்கிறேன் என இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமைக்கு இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். ஈரான், தன்னுடைய கூட்டாளிகளான ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் இணைந்து கொண்டு நடத்தும் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில மணிநேரத்தில், இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஈரானிய அரசு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் பாதிப்புகளை முழு அளவில் மதிப்பீடு செய்வது உடனே முடியாது.

ஆனால், அப்பாவி இஸ்ரேல் மக்களை துன்புறுத்தும் ஈரான் அரசின் முயற்சியை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என தெரிவித்து உள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் இந்த வன்முறைக்கு ஒரு தீர்வு காணும் முயற்சிக்காக பல்வேறு அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன் என்று ஸ்டார்மர் கூறியுள்ளார். இதேபோன்று, இந்த பகுதியில் உள்ள இங்கிலாந்து நாட்டினர் அனைவரும் விரைவில் வெளியேறும்படியும் அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதேபோன்று இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி ஜான் ஹீலேவும், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கும் வகையிலான முயற்சிகளில் இங்கிலாந்து படைகளும் பங்காற்றும் என்று கூறியுள்ளார்.

I completely condemn Iran's attack on Israel this evening. pic.twitter.com/cj2R6o5Lfd

— Keir Starmer (@Keir_Starmer) October 1, 2024
Read Entire Article