களக்காடு,
நெல்லை மாவட்ட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 60). இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் ஊருக்கு மேற்கே உள்ளன. நேற்று முன்தினம் இரவில் இவரது தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகவாழைகள், 20 தென்னை மரங்கள், 2 பனை மரங்கள் சேதமடைந்தன. இதனால் அவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சேதமான வாழை, தென்னை, பனை மரங்களை திருக்குறுங்குடி வனத்துறையினர் பார்வையிட்டனர். விளைநிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.