இஸ்ரேல், காசா இடையே 15 மாத கால போரை நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

3 hours ago 2

ஜெருசலேம்: காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் எட்டப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்குள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது.

இதில், காசாவில் 46,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த போரை நிறுத்த பல தரப்பிலும் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர் தோஹாவில் எட்டப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது மூலம் 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.

இந்த முடிவுக்கு நேற்று நடந்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டத்தில் முழு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டது. பிணைக் கைதிகள் (உயிருடன் இருப்போர், இறந்தோர்) திரும்புதலை உறுதி செய்தல் உள்ளிட்ட போர் இலக்குகள் அனைத்திலும் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

என்ன நடக்கும்?
* ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டவுடன் போர் நிறுத்தம் தொடங்கும்.

* காசாவில் இருக்கும் 100 பணயக்கைதிகளில் 33 பேர் அடுத்த 6 வாரங்களில் இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக விடுவிக்கப்பட உள்ளனர்.

* காசாவின் பல பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கும்.

* இதன் மூலம் காசாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு பாலஸ்தீனியர்கள் திரும்ப முடியும்.

The post இஸ்ரேல், காசா இடையே 15 மாத கால போரை நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article