
அபுதாபி,
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. ஜார்டான் வான் பரப்பில் இருந்து இஸ்ரேல் வான் பரப்பிற்குள் ஏர் இந்தியா விமானம் செல்லவிருந்தது.
அப்போது, டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம் உடனடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், விமானம் அபுதாபியில் பத்திரமாக தரையிறங்கியது. மேலும், டெல் அவிவ் , டெல்லி இடையேயான விமான சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.