சென்னை,
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் இவரது இசையில் வெளியான 'ஜமா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டதாக கடந்த மே மாதம் இளையராஜா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது முதல் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "2025 மார்ச் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் என்னுடைய முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிக்கெட் விற்பனை குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார்.
இவர் இசையமைத்துள்ள 'விடுதலை 2' திரைப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. தனது சிம்பொனி இசையை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்போவதாக இசையமைப்பாளர் இளையராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார்.