
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டமான 'நான் முதல்வன் திட்டம்' லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களின் வாழ்வை மாற்றி வருகிறது.
ஏழ்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயர்கல்வி சேருவதற்கான சூழல் குறைவாக உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்கள் கல்லூரியில் சேர 'கல்லூரி கனவு திட்டம்' நம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான வழிகாட்டி முகாமை இன்று சென்னையில் தொடங்கி வைத்தோம்.
பள்ளி முடித்த பின்னர் அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து உயர்கல்வி படிப்பது பற்றிய விழிப்புணர்வும் - வழிகாட்டுதல்களும் 'கல்லூரி கனவு' திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன.
மேலும், பணியாளர் தேர்வு ஆணையம் , ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டினோம்.
கல்லூரி கனவு 2025-இல் பயன்பெறும் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்தினோம். தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.என தெரிவித்துள்ளார்.