
புனே,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த மராத்தா படை தளபதி முதலாம் பேஷ்வா பாஜிராவின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது:-
தேசிய பாதுகாப்பு அகாடமி பேஷ்வா பாஜிராவின் சிலை நிறுவ பொருத்தமான இடமாகும். எப்போது எல்லாம் என் மனதில் எதிர்மறையான எண்ணம் தோன்றுகிறதோ, அப்போது எல்லாம் நான் இளம் வயது சத்ரபதி சிவாஜி, பேஷ்வா பாஜிராவை நினைத்து கொள்வேன். அவர்கள் சவாலான சூழலிலும் சுயராஜ்யத்தை உருவாக்கியவர்கள்.
தற்போது சுயராஜ்யத்தை காக்கும் பொறுப்பு 140 கோடி இந்தியர்களுக்கும் உள்ளது. அந்த பொறுப்பை நிலைநாட்ட போராட வேண்டிய நிலை வந்த போது, நாம் அதை செய்து முடித்தோம். சுயராஜ்யத்தை பாதுகாக்க சண்டை போட வேண்டிய தேவை ஏற்பட்டால் நமது படைகள் மற்றும் தலைமை அதை நிரூபித்து காட்டும். ஆபரேசன் சிந்தூர் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். தனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் பேஷ்வா பாஜிராவ் யாராலும் எழுத கூட முடியாத அளவிலான மிகச்சிறந்த வரலாற்றை உருவாக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா தேசிய பாதுகாப்பு அகாடமி மாணவர்களை சந்தித்து உரையாடினார்.