
புதுவை,
புதுவை மாநிலம் திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர், ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய இளம்பெண், அவரிடம் ஆபாசமாக கிளுகிளுப்பாக பேசினார்.
இந்த பேச்சில் மயங்கிய ஐ.டி. ஊழியர், அந்த பெண்ணை நேரில் பார்க்க விரும்பினார். அதன்படி இருவரும் புதுவை இந்திராகாந்தி சதுக்கம் அருகே நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். பின்னர் அந்தப் பெண், ஜாலியாக இருக்கலாம் என்று கூறி, கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி பீச் அருகே பழையபட்டின சாலையில் உள்ள தங்கும் விடுதிக்கு அவரை அழைத்துச்சென்றார்.
அறைக்குள் சென்று கதவை மூடிய நிலையில் அவரை நிர்வாணமாக நிற்கும்படி இளம்பெண் கூறியுள்ளார். அவரும் நிர்வாணமாக நின்ற நிலையில், ஒரு கும்பல் திடீரென்று அந்த அறைக்குள் புகுந்தது. அவர்கள் ஐ.டி. ஊழியரை நிா்வாண நிலையில் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலில் கிழித்து, கொடுமை செய்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். அப்போது தான், பணம் பறிப்பதற்காக இந்த கும்பலிடம் இளம்பெண் தன்னை சிக்க வைத்தது அவருக்கு தெரியவந்தது.
தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவரை கூனிச்சம்பட்டுக்கு அழைத்துச்சென்றனர்.
பணம் எடுத்து வர வீட்டுக்கு சென்றவர் நீண்ட நேரம் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இது தொடர்பாக ஐ.டி. ஊழியர் தனது நண்பர்கள் மூலம் கோட்டக்குப்பம் போலீசை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.இதையடுத்து உஷாரான இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தும் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெர்மின் ஆல்வின் (வயது 31), பிரபல ரவுடி பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பிரதீப் என்கிற சுகன், மரக்காணம் கூனிமேடு திருநாவுக்கரசு (24), வில்லியனூர் மணவெளி மோகன பிரசாத் (19), இடையஞ்சாவடி சுனில் (20) ஆகிய 4 பேரும் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூலம் ஐ.டி.ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஜெர்மின் ஆல்வின், திருநாவுக்கரசு, மோகனபிரசாத், சுனில் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பிரபல ரவுடி பிரதீப் என்கிற சுகன் மற்றும் இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.