பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் கஜேந்திர கடா பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது 24). இவருக்கும் பெலகாவி மாவட்டம் ராமதுர்காவை சேர்ந்த விஸ்வநாத் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுவேதாவுக்கும், தார்வார் மாவட்டம் சிவல்லி பகுதியை சேர்ந்த விஜய் நாயக் (27) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுவேதா தனது கணவரை உதறிவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதையடுத்து அவர் விஜய் நாயக்குடன் சிவல்லி கிராமத்தில் வசித்து வந்தார். அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவேதா, கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி வருவதை அறிந்த குடும்பத்தினர், தார்வாருக்கு வந்து அவரை அழைத்துள்ளனர். மேலும் விஸ்வநாத்துடன் சேர்ந்து வாழும்படி தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த சுவேதா, கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சுவேதா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தார்வார் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம்தெரியவில்லை. இது குறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் விஜயை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசாா் விசாரணை நடத்தி வருகிறார்கள்.