நன்றி குங்குமம் தோழி
உலகின் முதன்மையான கார் பந்தயம், ஃபார்முலா ஒன். இந்த கார் பந்தயத்துக்குள் நுழைவதற்கான முதல் படிதான், ஃபார்முலா 4. பத்து வருடங்களுக்கு முன்பு ஜூனியர் ரேஸர்களுக்காக உருவாக்கப்பட்ட கார் பந்தயம் இது. சர்வதேச அளவில் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடப்பதில்லை. ஆனால், சர்வதேச கார் பந்தய விதிமுறைகளைப் பின்பற்றி, உள் நாட்டுக்குள் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
நல்ல ரேஸர்களை அடையாளம் காண்பதற்கான போட்டியாகவும் இது கருதப்படுகிறது. மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் ஒரு போட்டி, கார் பந்தயம். இந்தியா போன்ற நாடுகளில் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் ஸ்ரியா லோகியா என்ற பெண், ஃபார்முலா 4 கார் பந்தயங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறார். இந்தியாவில் ஃபார்முலா 4 ரேஸில் போட்டியிடும் முதல் பெண் ரேஸர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் ஸ்ரியா. இந்தியாவின் இளம் பெண் ஃபார்முலா 4 ரேஸரும் இவரே. ஆம்; ஸ்ரியாவின் வயது 16தான்.
டால்பி சினிமா
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸும் இணைந்த திரையரங்கம்தான், டால்பி சினிமா. ஹெச்டிஆர் தரத்தில் புரஜக்ஷன் செய்வதற்காக இரண்டு கிறிஸ்டி 4கே லேசர் புரஜக்டர்களை பயன்படுத்துகின்றனர். இதை டால்பி விஷன் என்கின்றனர். அடுத்து அற்புதமான சவுண்ட் அனுபவத்திற்காக டால்பி அட்மோஸைப் பயன்படுத்துகின்றனர். பிரமாண்ட திரை, எங்கே அமர்ந்து பார்த்தாலும் சிறப்பான காட்சியனுபவத்தைக் கொடுக்கும் இருக்கை அமைப்பு, திரையரங்கில் இருப்பதையே மறக்கடித்து, நம்மை திரைக்குள் இழுத்துச் செல்லும் என இதன் சிறப்புகள் நீள்கின்றன. கடந்த 2014-ம் வருடம்தான் நெதர்லாந்தில் முதல் டால்பி திரையரங்கம் திறக்கப்பட்டது. இன்று 14 நாடுகளில் டால்பி திரையரங்குகள் உள்ளன.
விரைவில் இந்தியாவில், முதல் முறையாக புனேவில் உள்ள சிட்டி பிரைடு, ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் அல்லு சினிபிளக்ஸ், திருச்சியில் உள்ள எல்ஏ சினிமா, பெங்களூருவில் உள்ள ஏஎம்பி சினிமாஸ், கொச்சியில் உள்ள ஈவிஎம் சினிமாஸ், உலிக்கலில் உள்ள ஜி சினிபிளக்ஸ் ஆகிய 6 இடங்களில் டால்பி சினிமா திரையரங்குகள் வரப்போகின்றன என்று டால்பி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
குங்ஃபூ குயின்
குங்ஃபூவில் பட்டையக் கிளப்பி வருகிறார், ஷாங் சிக்ஸ்வான். இவரது வயது 9. ஷாங்குவை ‘குங்ஃபூ குயின்’ என்று புகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் சீனாவில் நடந்த உலகளவிலான ஷாலின் குங்ஃபூ ஸ்டார்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு, சிறந்த குங்ஃபூ வீராங்கனையாகத் தேர்வாகியிருக்கிறார். சீனாவின் மத்தியில் இருக்கும் ஹெனான் மாகாணத்தில் பிறந்து, வளர்ந்தவர் ஷாங். உடலை வில்லாக வளைத்து, இவர் செய்யும் குங்ஃபூ வித்தைகளைப் பார்த்து, சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் உறைந்து போயிருக்கின்றனர்.
அதிகளவிலான நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, உடலையும், மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறன் என அனைத்தும் இருந்தால் மட்டுமே குங்ஃபூ வித்தைகளைச் செய்ய முடியும் என்று நிபுணர்கள் வியந்து போயிருக்கின்றனர். இதுபோக கடந்த வாரம் ஷாலின் கோவிலில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் 47 நாடுகளைச் சேர்ந்த 124க்கும் மேற்பட்ட தற்காப்புக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தலைசிறந்த பத்து தற்காப்புக் கலைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஷாங். மீதி ஒன்பது பேரும் ஷாங்கைவிட வயதில் மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10
இன்று உலகம் முழுவதும் சுமார் 556 கோடி பேர் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.5% அதிகரித்திருக்கிறது. எந்த தளத்துக்கு மக்கள் அதிகமாகச் செல்கின்றனர் என்று சமீபத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகமானவர்கள் பார்த்த தளமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது, கூகுள். இதற்கடுத்து யூடியூப் உள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸப், சாட்ஜிபிடி, விக்கிபீடியா, ரெடிட், யாஹு ஆகிய தளங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
வைரல் பெண்
சமூக வலைத்தளப் பக்கங்களைத் திறந்தாலே, யாங் என்ற பெண்ணைப் பற்றித்தான் பேச்சு. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கும் 18 வயதான யாங்கின், மாதச் சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ.34,570. அவர் வேலை செய்து வரும் கடைக்கு அருகில், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வாடகையில் வீடுகள் இல்லை. சம்பளத்தின் பெரும்
பகுதியை வாடகைக்குக் கொடுக்கும் நிலையிலும் அவரில்லை. அதனால் தனது முதலாளியிடம் பேசி, கடையிலே தங்க அனுமதி பெற்றுள்ளார்.
கடையின் கதவை மூடி, திறக்கும் போது பிரச்னையிருப்பதால் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் யாங். அதனால் கடைக்குள் இருக்கும் கழிப்பறையில் தங்கிக்கொள்வதாக யாங் சொல்ல, முதலாளியும் ஒப்புக்கொண்டார். பகல் நேரங்களில் வாடிக்கையாளர்களின் கழிப்பறை, இரவில் யாங்கின் வீடாக மாறிவிடும். தூங்குவது, சமைப்பது, துணிகளைத் துவைப்பது, பொருட்களை வைப்பது என சகலமும் கழிப்பறைக்குள்தான். இதற்காக மாத வாடகையாக ரூ.545 கொடுக்கிறார். இதுபோக தம்பியின் கல்விக்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும் குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கும் அனுப்புகிறார் யாங்.
தொகுப்பு: த.சக்திவேல்
The post இளம் கார் ரேஸர் appeared first on Dinakaran.