திருப்பூர்: இந்தியா முழுவதும் டிஜிட்டல் பேமென்ட் திட்டம் விரிவடைந்து வரும் நிலையில் தொழில்நுட்ப இடைவெளி உள்ளவர்களால் டிஜிட்டல் பேமென்ட் திட்டத்தில் பணம் செலுத்த முடியாமல் பணம் கொடுத்து சில்லறை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. பணம் இருந்தால் தான் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை மாறி கையில் ஒற்றை செல்போனுடன் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரக்கூடிய காலமாக மாறிவிட்டது. ஒன்றிய அரசு டிஜிட்டல் பேமென்ட் திட்டத்தை அறிமுகம் செய்யும்போது இது நடைமுறை சாத்தியமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் தற்போது சாலையோர கடைகள் முதல் மல்டி லெவல் மால் மற்றும் சூப்பர் மார்க்கெட் மட்டுமல்லாது அரசு பேருந்துகள், ரயில் நிலையங்களில் கூட யுபிஐ மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெற்று வருகின்றனர். சமூக வாழ்க்கையில் ஒரு அங்கமாகவும் டிஜிட்டல் பேமென்ட் மாறிவிட்டது. விருப்பத்திற்கு ஏற்ற பொருட்களை பெற்று பணமாக அல்லாது யுபிஐ எனப்படும் போன் பே, ஜி பே உள்ளிட்டவை மூலமாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. 90களில் பிறந்தவர்கள் ஓரளவு இதனை அப்டேட் செய்து கொண்டு டிஜிட்டல் பேமென்ட் திட்டத்திற்கு மாற்றம் பெற்று இருந்தாலும், 90க்கு முந்தைய நபர்களால் இன்னும் முழுமையாக தங்களை டிஜிட்டல் பேமென்ட் திட்டத்திற்குள் கொண்டு வர முடியவில்லை.
தொழில்நுட்ப அணுகல் இடைவெளி காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளது. 70% பேர் வரை டிஜிட்டல் பேமென்ட் முறையில் பணம் செலுத்தி வரக்கூடிய நிலையில் சில்லறை புழக்கம் குறைந்துள்ளதால் 30 சதவீதம் பேர் பணம் கொடுத்து பொருட்களை வாங்கிய பின்பு சில்லறை பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் வங்கி கணக்கு மூலமாகவே ஊதியம் வரவு வைக்கப்படுகிறது. இதன் பின்பாக தொழிலாளர்கள் வங்கி ஏடிஎம் அல்லது வங்கி கிளைகளுக்கு சென்று நேரடியாக பணத்தை எடுத்து தங்களுக்கு தேவைகளுக்கு செலவு செய்து வந்தனர்.
ஆனால், யுபிஐ பயன்பாடு அதிகரித்ததற்கு பிறகு வங்கி கிளைகளுக்கு சென்று பணம் எடுப்பது அல்லது ஏடிஎம் மையங்களுக்கு சென்று காத்திருந்து பணம் எடுக்கும் நிலை குறைந்துள்ளது. அனைத்து கடைகள் மட்டுமல்லாது அரசு பேருந்துகள், ரயில் நிலையங்களிலும் டிக்கெட் பெறுவதற்கு யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டதால் ரொக்கமான பணப்புழக்கம் என்பது 70 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் முழுவதுமாக யுபிஐ வசதி பயன்படுத்தாமல் ஆண்ட்ராய்டு செல்போன், தொழில்நுட்ப அணுகல் இல்லாதவர்கள் பணம் கொடுத்து சில்லரை பெறும் போது சில்லறை தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
* இதுகுறித்து திருப்பூர் காங்கயம் சாலை பேக்கரி உரிமையாளர் கூறியதாவது: 10 ரூபாய் பலகாரம் முதல் 15 ரூபாய் டீ வரை எல்லாவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் ஜிபே செய்ய தொடங்கிவிட்டனர். சில வருடங்களுக்கு முன்பு இம்முறை கடினமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் பணமாக தராமல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால் நாங்கள் மொத்தமாக பொருட்களை வாங்க செல்லும்போது வங்கியில் இருந்து பணத்தை எடுத்து மீண்டும் பயன்படுத்த வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது நாங்கள் மொத்தமாக வாங்குகின்ற இடத்திலும் டிஜிட்டல் பேமென்ட் செயல்படுத்தப்பட்டிருப்பதால் வங்கியில் இருந்து பணம் எடுக்காமல் அனைத்தும் மொபைல் வழியாகவே செலுத்தப்பட்டு விடுகிறது. ஆனால், முதியவர்கள் பலரும் இன்னும் ஸ்மார்ட் போன், டிஜிட்டல் பேமென்ட் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தாமல் உள்ளனர். அவர்கள் தங்கள் வாங்கிய பொருளுக்கு பணமாக கொடுத்து செல்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் தரும் 200 ரூபாய்க்கு கூட சில்லறை தர முடிவதில்லை. காரணம் 70 சதவீதத்திற்கு அதிகமாக டிஜிட்டல் பேமென்ட் என்பதால் ரொக்கமான பணப்புழக்கம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
யுபிஐக்கு ஜிஎஸ்டி வரி?
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் ஜிபே, போன் பே உள்ளிட்ட யுபிஐ மூலம் பணம் செலுத்தப்படுவதற்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக வதந்திகள் பரவின. பொதுமக்கள் பெரும்பாலும் யுபிஐ பயன்பாட்டினை பயன்படுத்த தொடங்கியுள்ள இந்நேரத்தில் இந்த தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், இது முற்றிலும் தவறானது. பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஒன்றிய அரசு சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் மட்டும் 24.77 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இளநீர் கடை முதல் மால்கள் வரை டிஜிட்டல் பேமென்ட் ரொக்கமான பணப்புழக்கம் குறைந்ததால் சில்லறை தட்டுப்பாடு appeared first on Dinakaran.